கல்வா அருகே அதிகாலையில் பயங்கரம் மருந்துக்கடைக்காரர் சுட்டுக்கொலை கொள்ளையனுக்கு வலைவீச்சு


கல்வா அருகே அதிகாலையில் பயங்கரம் மருந்துக்கடைக்காரர் சுட்டுக்கொலை கொள்ளையனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Dec 2019 5:00 AM IST (Updated: 29 Dec 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

தானே மாவட்டம் கல்வா சிவாஜி நகரில் மருந்துக்கடை நடத்தி வந்தவர் ஜிதேந்திர சிங் என்கிற ராஜ் புரோகித்.

தானே, 

கல்வா அருகே அதிகாலையில் மருந்துக்கடைக்குள் புகுந்த கொள்ளையன் கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருந்துக்கடை

தானே மாவட்டம் கல்வா சிவாஜி நகரில் மருந்துக்கடை நடத்தி வந்தவர் ஜிதேந்திர சிங் என்கிற ராஜ் புரோகித்(வயது26). இவர் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு, மருந்துக்கடைக்கு உள்ளேயே படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மருந்துக்கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன் ஒருவன், அங்கிருந்த பணப்பெட்டியை உடைத்துக்கொண்டிருந்தான்.

இந்த சத்தம்கேட்டு தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்த ராஜ் புரோகித் சத்தம்போட்டார்.

சுட்டுக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ராஜ் புரோகித்தை நோக்கி 2 ரவுண்டு சுட்டான். இதில், குண்டு பாய்ந்ததில் ராஜ் புரோகித் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிவிட்டு கொள்ளையன் அங்கிருந்து தப்பிஓடிவிட்டான்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கல்வா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில், கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது.

கொள்ளையனுக்கு வலைவீச்சு

இதனைத்தொடர்ந்து போலீசார் ராஜ் புரோகித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கல்வா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையனை வலைவீசி தேடிவருகின்றனர்.

மருந்துக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story