விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.2 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றவர்கள் பயன்பெற முடியாது அரசாணை வெளியீடு
மகாத்மா ஜோதிராவ் புலே விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்கள் பயன்பெற முடியாது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
மகாத்மா ஜோதிராவ் புலே விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்கள் பயன்பெற முடியாது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பயிர்க்கடன் தள்ளுபடி
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நடந்து முடிந்த சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் மகாத்மா ஜோதிராவ் புலே விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின்படி 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பயிர்க்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்களுக்கான வரைமுறைகள் வருமாறு:-
ரூ.2 லட்சத்துக்கும் அதிக கடன்...
மகாத்மா ஜோதிராவ் புலே விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தின்படி 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.2 லட்சத்திற்குள் பயிர்க்கடன் பெற்று 2019-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை திருப்பி செலுத்தாதவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவார்.
ரூ.2 லட்சத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் இந்த திட்டத்தால் நன்மை பெற முடியாது.
மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள்
மக்கள் பிரதிநிதிகள், தற்போது பதவியில் உள்ள மற்றும் முன்னாள் மந்திரிகள், தற்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 4-ம் நிலை ஊழியர்களை தவிர்த்து மாத குடும்ப வருமானம் ரூ.25 ஆயிரத்துக்கு அதிகம் உள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைய முடியாது.
இதேபோல் வேளாண்மை அல்லாத துறையிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்துபவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களை தவிர்த்து மாத குடும்ப வருமானம் ரூ.25 ஆயித்திற்கும் அதிகமாக இருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் சலுகை கிடைக்காது.
இவ்வாறு இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் அதிருப்தி
இந்தநிலையில் விவசாய அமைப்பின் தலைவர் அஜித் நவலே இந்த அரசாணை விவசாயிகள் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அதிகப்படியான விவசாயிகள் ரூ.2 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றுள்ளனர். எனவே பெரும்பாலான விவசாயிகள் இதன் மூலம் நன்மை பெற முடியாது. கடன் தள்ளுபடிக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படாது என அரசு முதலில் வாக்குறுதி அளித்திருந்தது.
எனவே இந்த அரசாணையை அரசு திரும்பபெற்றுக்கொண்டு எந்த நிபந்தனையும் இன்றி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story