ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பூட்டிக்கிடக்கும் பொதுக்கழிப்பறை - திறக்க பொதுமக்கள் கோரிக்கை
ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பூட்டிக்கிடக்கும் பொதுக்கழிப்பறையை திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குடிமைபொருள் தாசில்தார் அலுவலகம், பொது இ-சேவை மையம் ஆகிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், தாலுகா அலுவலகம் அருகில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. அங்கு ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு, ஈரோடு மகளிர் போலீஸ் நிலையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. எனவே அங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.
போலீசாரிடம் புகார் மனு அளிக்க வருபவர்களும், வருவாய்த்துறை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்க வருபவர்களும் கழிப்பறை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனால் பொது கழிப்பறை கட்டிக்கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அருகில் தாலுகா அலுவலகத்துக்கு பின்புறத்தில் புதிய கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால் இந்த கழிப்பறையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாமல் இருந்து வந்தது.
இதையடுத்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று பொது கழிப்பறை திறக்கப்பட்டது. மேலும் “கழிப்பறை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக...” என்று அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த கழிப்பறை பூட்டப்பட்டது. இதனால் கழிப்பறை கட்டப்பட்டும் பொதுமக்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-
ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும் தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். அங்கு புதிய கழிப்பறை கட்டப்பட்டது. இந்த கழிப்பறை பல நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதுதொடர்பாக போலீசாரிடம் சென்று கேட்டபோது, வருவாய்த்துறை அதிகாரிகள் பயன்பாட்டுக்காக கழிப்பறையை பூட்டி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
பொது கழிப்பறை பூட்டி கிடப்பதால் ஒருசிலர் ஈரோடு கிளை ஜெயில் அருகில் உள்ள காலி இடத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே தினமும் காலையில் இருந்து மாலை வரை பொது கழிப்பறையை திறந்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story