சென்னை தீவுத்திடல் எதிரே கூவம் கரையோர குடியிருப்புகள் அகற்றம் மக்கள் போராட்டத்தால் பரபரப்பு


சென்னை தீவுத்திடல் எதிரே கூவம் கரையோர குடியிருப்புகள் அகற்றம் மக்கள் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Dec 2019 4:45 AM IST (Updated: 29 Dec 2019 10:27 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தீவுத்திடல் எதிரே உள்ள கூவம் கரையோர குடியிருப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை தீவுத்திடல் எதிரே காந்தி நகர், இந்திராகாந்தி நகர், சத்தியவாணி முத்து நகர் ஆகிய இடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பல ஆண்டுகளாக இருந்து வந்தன. கூவம் கரையோரம் இக்குடியிருப்புகள் அமைந்ததால், அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகள் திட்டமிட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் அப்பகுதி மக்கள் வெளியேறாமல் தொடர்ந்து இந்த இடத்திலேயே இருந்து வந்தனர்.

இந்தநிலையில் கூவம் கரையோர குடியிருப்புகளை அகற்றுவதற்காக கடந்த வாரம் மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் வந்தனர். ஆனால், அப்பகுதி மக்கள் தங்களுடைய குழந்தைகள் பள்ளி முழு ஆண்டு தேர்வு முடிந்தவுடன் காலி செய்துவிடுகிறோம் என்று அதிகாரிகளிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் வீடுகளை இடிக்காமல் திரும்பிச் சென்றனர்.

இந்தநிலையில் திடீரென்று தீவுத்திடல் எதிரே நேற்று காலை அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜே.சி.பி. எந்திரங்களுடன் மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் வந்தனர். குடியிருப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் வந்துள்ளதை அறிந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஒரு சிலரை போலீசார் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து கூவம் கரையோர குடியிருப்புகள் இடித்து அகற்றும் பணி தொடங்கியது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால், இப்பணி மேலும் சில நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலம் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேறுவதை நினைத்து ஆண்கள் பலரும் கண்ணீர் வடித்தனர்.

Next Story