சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்தது: ஜவுளி வியாபாரியின் மனைவி உடல் கருகி சாவு
கடலூரில் சமையல் செய்த போது, சேலையில் தீபற்றி எரிந்த ஜவுளி வியாபாரியின் மனைவி உடல் கருகி உயிரிழந்தார்.
கடலூர்,
கடலூர் மஞ்சக்குப்பம் புதுஉப்பலவாடி தெருவை சேர்ந்த ஜவுளி வியாபாரி நூர்முகம்மது. இவருடைய மனைவி ஜஜிலியா(வயது 33). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜஜிலியா அவரது வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. உடல் முழுவதும் தீ மளமளவென பரவியதால் வெப்பம் தாங்க முடியாமல் அவர் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடிச்சென்று ஜஜிலியாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு ஜஜிலியாவை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story