சாலையோர பள்ளத்தில் மொபட் பாய்ந்து விபத்து; பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி - ஒருவர் படுகாயம்
கோவையில் சாலையோர பள்ளத்தில் மொபட் பாய்ந்ததில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போத்தனூர்,
கோவை போத்தனூரில் உள்ள சாய்நகரை சேர்ந்தவர் சுல்தான் பாட்ஷா. இவரது மகன் ஆசிக் பாஷா (வயது 17). ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்த முகமது சபீர் மகன் முகமது நசீர் (16). மஸ்தான் சாகிப் வீதியை சேர்ந்த முகமது அசாம் மகன் முகமது அஸ்கர் (15). நண்பர்களான இவர்கள் 3 பேரும் போத்தனூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் 3 பேரும் விடுமுறை தினங்களில் கேட்டரிங் வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் மாணவர்கள் 3 பேரும் ஒரே மொபட்டில் ஆத்துப்பாலத்தில் இருந்து போத்தனூர் நோக்கி சென்றனர். ஆஷிக் பாஷா மொபட்டை ஓட்டினார். மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் போத்தனூர் சாய்நகர் சந்திப்பு அருகே சென்றபோது மொபட்டின் பின்பக்க டயரின் டியூப் திடீரென்று வெடித்தது. இதில் நிலைதடுமாறிய மொபட் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் முகமது நசீர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆசிக் பாஷா, முகமது அஸ்கர் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ஆசிக் பாஷா இறந்தார். முகமது அஸ்கருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணை நடத்தினர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story