மீண்டும் எல்லைப்பிரச்சினை கர்நாடகம்-மராட்டியம் இடையே பஸ் சேவை ரத்து பயணிகள் அவதி
மீண்டும் எல்லைப்பிரச்சினை உருவாகி உள்ள நிலையில் நேற்று பஸ் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
பெங்களூரு,
மீண்டும் எல்லைப்பிரச்சினை உருவாகி உள்ள நிலையில் நேற்று பஸ் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
எல்லைப்பிரச்சினை
கர்நாடகம்-மராட்டியம் எல்லையில் பெலகாவி மாவட்டம் உள்ளது. பெலகாவி மாவட்டத்தில் ஏராளமான மக்கள் மராட்டிய மொழி பேசுகிறார்கள். இதனால் பெலகாவியில் உள்ள சில கிராமங்களை மராட்டியத்துடன் சேர்க்க வேண்டும் என்றும், பெலகாவி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் கர்நாடகத்துடன் தான் இருக்க வேண்டும் என்றும் இருஅரசுகளுக்கு இடையே எல்லைப்பிரச்சினை உள்ளது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் மராட்டிய மொழி பேசும் மக்கள் வசிக்கும் 800-க்கும் அதிகமான கிராமங்கள் பெலகாவி மாவட்டத்தில் உள்ளன. இந்த கிராமங்களை மராட்டியத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் மராட்டிய ஏகிகரண் சமீதி (எம்.இ.எஸ்.) அமைப்பை சேர்ந்தவர்கள் மராட்டிய அரசிடம் மனு கொடுத்தனர். இதன் தொடர்ச்சியாக கர்நாடக-மராட்டிய எல்லைப்பிரச்சினை வழக்கை எதிர்கொள்ள மந்திரிகளான சகான் பூஜ்பால் மற்றும் ஏக்நாத் சிண்டே ஆகியோரை ஒருங்கிணைப்பாளர்களாக அமைத்து மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவு பிறப்பித்தார்.
உருவபொம்மைகள் எரிப்பு
இதனால் மீண்டும் கர்நாடகம்-மராட்டியம் இடையே மீண்டும் எல்லைப்பிரச்சினை வெடித்துள்ளது. இதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக நவ்நிர்மான் சேனா தலைவர் பீமாசங்கர் பட்டீல் பேசுகையில், ‘பெலகாவி மாவட்டத்தில் உள்ள கிராமங்களை மராட்டியத்துடன் இணைக்க கூறும் எம்.இ.எஸ். தலைவர்களை கர்நாடக-மராட்டிய எல்லையில் சுட்டு கொல்ல வேண்டும்‘ என்று ஆக்ரோஷமாக பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கோலாப்பூரில் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர். மேலும் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. மேலும் கோலாப்பூரில் உள்ள தியேட்டரில் திரையிடப்பட்ட கன்னட திரைப்படங்கள் நிறுத்தப்பட்டன. இதேபோல் நேற்று பெலகாவியில் கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் உருவபொம்மையை எரித்து கோபத்தை வெளிப்படுத்தினர்.
பஸ் சேவை ரத்து
இதனால் பெலகாவி-கோலாப்பூர் மாவட்டங்களுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதை முன்கூட்டியே உணர்ந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் கர்நாடகம்-மராட்டியம் இடையேயான பஸ் போக்குவரத்தை தடை செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெலகாவி வழியாக மராட்டியத்துக்கும், மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து கர்நாடகத்துக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை.
கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மராட்டியம் நோக்கி புறப்பட்ட பஸ்கள் பெலகாவி மாவட்டம் நிப்பானியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story