பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு


பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 29 Dec 2019 10:45 PM GMT (Updated: 29 Dec 2019 6:19 PM GMT)

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இதில் பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி செப்டம்பர் மாதம் 25-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 28-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. சராசரியாக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது. இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது. இதனை கருத்தில் கொண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி சென்னை குடிநீர் வாரியத்துக்கும், 11-ந் தேதி புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு நவம்பர் மாதம் 1-ந் தேதி செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர் வரத்து வினாடிக்கு 500 கனஅடியாக குறைந்ததால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு கடந்த 25-ந் தேதி நிறுத்தபட்டது.

செம்பரம்பாக்கத்துக்கு மட்டும் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்த ந்ிலையில் கிருஷ்ணா நதி நீர் வரத்து நேற்று வினாடிக்கு 400 கனஅடிக்கும் குறைந்ததால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக புழல் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கபட்டது. வினாடிக்கு 355 கனஅடியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 28.60 அடியாக பதிவானது. 1,436 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 371 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து சென்னன குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 19 கனஅடி தண்ணீர் வீதம் அனுப்பப்படுகிறது.

Next Story