போடி ஒன்றிய மலைக்கிராமங்களுக்கு குதிரைகளில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்
போடி ஒன்றியத்தில் உள்ள மலைக்கிராமங்களுக்கு குதிரைகளில் வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
பெரியகுளம்,
தேனி மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் 2-வது கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதற்கான வாக்குப்பெட்டிகள் ஒன்றிய அலுவலகங்களில் இருந்து நேற்று பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.
இதில் போடி ஒன்றியத்தில் உள்ள கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சென்டிரல் ஸ்டேஷன் கிராமத்துக்கு குதிரையில் வாக்குப்பெட்டி எடுத்துச் செல்லப்பட்டது. குரங்கணியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு சாலை வசதி கிடையாது. மலையேற்றப் பாதை வழியாக நடந்து தான் செல்ல வேண்டும். இந்த கிராமத்தில் மொத்தம் 149 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்வதற்கு போடி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து குரங்கணிக்கு வாக்குப்பெட்டி ஜீப்பில் எடுத்து வரப்பட்டது. அங்கு இருந்து சென்டிரல் ஸ்டேஷனுக்கு குதிரையில் வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டது. அதனுடன், வாக்குச்சாவடி அலுவலர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் ஆகியோரும் நடந்து சென்றனர்.
அதுபோல், போடி ஒன்றியத்தில் உள்ள அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி-ஊத்துக்காடு மலைக்கிராமத்தில் மொத்தம் 464 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு செல்வதற்கும் சாலை வசதி கிடையாது. கரடு, முரடான மலைப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டும்.
இந்த கிராமத்துக்கும் போடியில் இருந்து தேனி, பெரியகுளம் வழியாக சோத்துப்பாறைக்கு வாக்குப்பெட்டிகள் எடுத்து வரப்பட்டன. பின்னர், அங்கிருந்து ஊரடி-ஊத்துக்காடு மலைக்கிராமத்திற்கு குதிரையில் வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன. வாக்குச்சாவடி அலுவலர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் ஆகியோரும் குதிரையோடு நடந்து சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வெள்ளக்கவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர், பெரியூர் ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு பெரியகுளம் அருகே சோத்துப்பாறை பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் ராஜாங்கம், ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் குதிரையில் வாக்குப்பெட்டிகளை எடுத்து சென்றனர்.
Related Tags :
Next Story