போராட்டங்களின்போது பொது சொத்துகளை சேதப்படுத்தும் நபர்களின் சொத்துகளை ஜப்தி செய்வது குறித்து மாநில அரசு ஆலோசனை


போராட்டங்களின்போது பொது சொத்துகளை சேதப்படுத்தும் நபர்களின் சொத்துகளை ஜப்தி செய்வது குறித்து மாநில அரசு ஆலோசனை
x
தினத்தந்தி 30 Dec 2019 4:00 AM IST (Updated: 30 Dec 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

போராட்டங்களின்போது பொதுசொத்துகளை சேதப்படுத்தும் நபர்களின் சொத்துகளை ஜப்தி செய்வது குறித்து மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

பெங்களூரு, 

போராட்டங்களின்போது பொதுசொத்துகளை சேதப்படுத்தும் நபர்களின் சொத்துகளை ஜப்தி செய்வது குறித்து மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

சொத்துகளை ஜப்தி செய்ய முடிவு

கர்நாடகத்தில் பல்வேறு போராட்டங்களின்போது போராட்டங்களில் ஈடுபடும் நபர்கள் பொதுசொத்துகளை சேதப்படுத்துகிறார்கள். இதனால் அரசுக்கு இழப்பு அதிகமாக ஏற்படுகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதிலும் பொதுசொத்துகள் சேதம் அடைந்தன.

இந்த நிலையில், பொதுசொத்துகளை சேதப்படுத்தும் நபர்களின் சொத்துகளை ஜப்தி செய்வது மற்றும் அவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து எடியூரப்பா தலைமையிலான அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக, முதல்-மந்திரி எடியூரப்பாவை, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் மற்றும் கல்வித்துறை மந்திரி சுரேஷ் குமார் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

திருத்த மசோதா

அதாவது கர்நாடகத்தில் 1981-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பொதுசொத்து சேதம் மற்றும் இழப்பு ஏற்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்து அந்த சட்டத்துக்கு வலுசேர்ப்பது பற்றி பேசியுள்ளனர். அதன்படி பொதுசொத்துகளை சேதப்படுத்தினால் ஜாமீன் கிடைக்காத வகையில் கைது செய்யப்படுவது, ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பது, அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பது ஆகியவற்றை சட்டத்தில் சேர்த்து திருத்தம் செய்வது குறித்து விரிவாக விவாதித்துள்ளனர்.

மேலும் அடுத்து கூடும் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் இதுபற்றிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன்பிறகு சட்டத்திருத்தம் கொண்டு வருவதை நோக்கி கர்நாடக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story