களரம்பட்டியில் பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயாரான கரும்புகள்


களரம்பட்டியில் பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயாரான கரும்புகள்
x
தினத்தந்தி 29 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-30T00:46:19+05:30)

பொங்கல் பண்டிகைக்காக களரம்பட்டியில் பயிரிடப்பட்டுள்ள செங்கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

பெரம்பலூர்,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கரும்பு தான். புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் சீர்வரிசை பொருட்களுடன் சேர்த்து கரும்புகளை கட்டு, கட்டாக வாங்கி கொடுப்பார்கள். இதனால் கரும்பு விவசாயிகள் பொங்கல் பண்டிகையை கணக்கிட்டு சுமார் 10 மாதங்களுக்கு முன்பே கரும்பு சாகுபடியை தொடங்கி விடுவார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் களரம்பட்டி, செட்டிக்குளம், பொம்மனப்பாடி, மலையாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

10 மாத பயிரான செங்கரும்பு கடந்த மாசி மாதம் இறுதியில் பயிர் செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு இந்த கரும்புகள் வெட்டப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது கரும்பு விளைச்சலாகி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் தற்போது வியாபாரிகள் அறுவடைக்கு தயாராகி உள்ள செங்கரும்பினை பார்த்து கொள்முதல் செய்வதற்கு பேரம் பேசி செல்கின்றனர். இன்னும் சில நாட்களில் கரும்பு அறுவடை பணிகள் தொடங்கும் நிலை உள்ளது.

போதிய அளவு மழை பெய்யாததால்...

இதுகுறித்து களரம்பட்டியை சேர்ந்த விவசாயி ராமசாமி கூறுகையில், ஒரு தாய் தனது குழந்தையை கருவில் 10 மாதம் சுமந்து பெற்றெடுப்பது போல், நாங்கள் கரும்பினை ஒரு குழந்தை போல் வளர்த்து வருகிறோம். இந்த ஆண்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால், விவசாயிகள் கடந்த ஆண்டை விட குறைந்த அளவே செங்கரும்பு பயிரிட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு களரம்பட்டி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் செங்கரும்பினை சாகுபடி செய்து வந்தனர். தற்போது போதிய மழை பெய்யாததாலும், பெரிய ஏரியும் சரியாக தூர்வாரப்படாததால் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையால் களரம்பட்டியில் விரல் விட்டு எண்ணக்கூடிய விவசாயிகளே செங்கரும்பினை சாகுபடி செய்துள்ளனர். கரும்பு விவசாயியான நான் கால் ஏக்கருக்கு செங்கரும்பு சாகுபடி செய்துள்ளேன். அதற்கே ரூ.25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளேன். போதிய லாபம் இல்லாததால் இனிமேல் செங்கரும்பினை சாகுபடி செய்வதை நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன். மேலும் கடந்த ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கஜா புயலினால் பாதிப்பால் கரும்பின் விளைச்சல் குறைவாக இருந்ததால், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து கரும்பு வெளி மாவட்டங்களுக்கு அதிகளவில் விற்பனைக்கு சென்றன. ஆனால் இந்த ஆண்டு பல பகுதிகளில் கரும்பு விளைச்சல் அதிகமாக உள்ளது என தெரிகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் விளையும் செங்கரும்புகள் இங்குள்ள வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கே விற்கப்படும் என்றார்.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தற்போதே கரும்புகள் அமோக விளைச்சல் அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story