குப்பைகளாக காட்சி அளிக்கும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை - தினமும் துப்புரவு பணி மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை கிரிவலப்பாதை குப்பைகளாக காட்சி அளிக்கிறது. தினமும் துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி நாட்களிலும், விசேஷ நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
தற்போது அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் பகல், இரவு நேரங்களில் கிரிவலம் செல்கிறார்கள். கிரிவலம் செல்லும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கிரிவலப்பாதையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நடைபாதைகள், இருக்கைகள், பக்தர்கள் ஓய்வறைகள், நிழற்குடை போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிரிவலப்பாதையில் காணும் இடமெங்கும் குப்பைகளாக காட்சி அளிக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் காணப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாவட்ட நிர்வாகம் இதனை கண்டு கொள்ளலாமல் இருப்பது வேதனையாக உள்ளது.
நடைபாதையில் மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் காய்ந்த இலைகள், அன்னதானம் வழங்கப்பட்ட இலைகள், பாக்கு தட்டுகள் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது. கிரிவலப்பாதை பாதி நகராட்சி பகுதியிலும், மீதமுள்ளவை ஊரக பகுதியிலும் வருகிறது.
கிரிவலப்பாதையில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டு உள்ள இரும்பு குப்பை தொட்டிகளும் சரிந்து விழுந்து பயனற்று கிடக்கின்றன. கிரிவலம் செல்லும் பக்தர்கள் இதனை காணும் போது முகம் சுளிக்கின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தை குறை கூறும் அவல நிலை உள்ளது.
கிரிவலப்பாதையில் குப்பைகள் தினமும் அகற்ற வேண்டும் என்றும், கிரிவலப்பாதையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ஒட்டு மொத்த துப்புரவு பணி ஒரு நாள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அது மட்டுமின்றி கிரிவலப்பாதை காஞ்சி ரோடு அபய மண்டபம் எதிரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைக்கப்பட்டு இருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அந்த இடத்தில் இருந்து திடீரென அகற்றப்பட்டுள்ளது. மக்கள் வரவேற்பை பெற்ற அதை மீண்டும் அதே இடத்தில் வைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story