8-ந் தேதி பொது வேலைநிறுத்தம்: சொந்த வாகனங்களை 10 நிமிடம் சாலையில் நிறுத்தி ஆதரவு தரவேண்டும்


8-ந் தேதி பொது வேலைநிறுத்தம்: சொந்த வாகனங்களை 10 நிமிடம் சாலையில் நிறுத்தி ஆதரவு தரவேண்டும்
x
தினத்தந்தி 29 Dec 2019 10:45 PM GMT (Updated: 2019-12-30T01:00:45+05:30)

வருகிற 8-ந் தேதி நடக்கும் பொதுவேலைநிறுத்த போராட்டத்தன்று சொந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் 10 நிமிடம் சாலையில் ஆங்காங்கே நிறுத்தி ஆதரவுதர வேண்டும் என ஆயத்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

மத்திய அரசின் தொழிலாளர் விரோதபோக்கை கண்டித்து வருகிற 8-ந் தேதி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இதுகுறித்த ஆயத்த மாநாடு திருச்சியில் நேற்று நடந்தது. அரசு போக்குவரத்து கழகங்கள், ஆட்டோ, இலகுரக வாகனம், லாரி, கால்டாக்சி, வாகனம் பழுதுபார்ப்போர் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உள்ளிட்ட மோட்டார் வாகன தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து ஆயத்த மாநாட்டை நடத்தின.

மாநாட்டுக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின்(எல்.பி.எப்) அகில இந்திய பொருளாளர் கி.நடராசன் தலைமை தாங்கினார். போக்குவரத்து கூட்டமைப்பின் பொருளாளர் ஆ.தர்மன், சி.ஐ.டி.யு.மாநில பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் குணசேகரன், பொதுசெயலாளர் பிரபாகரன் (நிர்வாக பணிகள்), சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்திரராஜன், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் மூர்த்தி மற்றும் சுப்பிரமணியன்(எச்.எம்.எஸ்.), அந்திரிதாஸ் (எம்.எல்.எப்.), நாராயணசாமி(ஐ.என்.டி.யு.சி.) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எல்.பி.எப். அகில இந்திய பொருளாளர் நடராசன் கூறியதாவது:-

பொதுத்துறை நிறுவனங்களையும், அதன் பங்குகளையும் இந்நாட்டு-பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பனை செய்யும் போக்கு தொடர்கிறது. மோட்டார் தொழிலை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான வகையில், மோட்டார் வாகன சட்டம் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி திருத்தப்பட்டுள்ளது. இந்த திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் போக்குவரத்து துறை முற்றிலும் சீர்குலைக்கப்படும்.

அரசு போக்குவரத்து கழகங்கள் முற்றிலும் அழிக்கப்படும். மோட்டார் தொழிலாளர்கள் மட்டுமின்றி சிறிய அளவில் சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள், பராமரிப்பு பட்டறைகள், ஒர்க்‌ஷாப்புகள், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் வைத்திருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் வகையில் சட்ட திருத்தம் உள்ளது.

சுங்கக்கட்டணம்

மேலும் பெட்ரோல், டீசல் விலை எவ்வித கட்டுப்பாடுமின்றி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சுங்க கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. ‘பாஸ்ட் டேக்’ முறைக்கு மாற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். மாறவில்லை என்றால் சுங்க கட்டணம் இருமடங்காக வசூலிக்கப்படும் என மத்திய அரசு அச்சுறுத்துகிறது.

எனவே, மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப்பெறக்கோரி வருகிற 8-ந் தேதி நடக்கும் அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று மோட்டார் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க ஆயத்த மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

10 நிமிடம் நிறுத்தி ஆதரவு

எனவே, வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு போக்குவரத்து, ஆட்டோ, சாலை போக்குவரத்து, ஒர்க்‌ஷாப்புகள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் முழுமையாக கலந்து கொள்ள அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் வைத்து இயக்கிகொண்டிருக்கும் இதர பிரிவினர் வருகிற 8-ந் தேதி சாலையில் வாகனங்களை இயக்கி கொண்டிருக்கிற நிலையில் மதியம் 12 மணி முதல் 12.10 மணிவரை தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் 10 நிமிடங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி ஆதரவு தரவும் மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story