வாக்குப்பதிவின்போது “விதிமுறைகளை மீறுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்” கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை
“தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது விதிமுறைகளை மீறுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்“ என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
“தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது விதிமுறைகளை மீறுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்“ என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மறுவாக்குப்பதிவு
தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. முதல்கட்ட தேர்தல் நடந்த சாத்தான்குளம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட நெடுங்குளம் பஞ்சாயத்து வேலன் புதுக்குளம் வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவின்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்களிப்பு மறைவு அட்டை பகுதிக்குள் வாக்காளர்கள் தவிர்த்து இதர நபர்கள் தலையீடு இருந்ததும், வாக்குப்பதிவு ரகசியம் காக்கப்படாததும் கண்டறியப்பட்டது.
இதனால் மாநில தேர்தல் ஆணைய உத்தரவின்படி மறுவாக்குப்பதிவு இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வேலன்புதுக்குளத்தை சார்ந்த முத்துமாலை, பரமசிவன் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர். கண்ணன், செந்தூர்பாண்டி உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர். இந்த பகுதியில் மறுவாக்குப்பதிவின்போது கூடுதலான போலீஸ் பாதுகாப்பும், வீடியோ கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குண்டர் சட்டம்
2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 2-ம் கட்ட தேர்தல் மற்றும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் உள்ளாட்சி தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.
குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story