விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் - விவசாயிகள் கவலை


விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 29 Dec 2019 10:15 PM GMT (Updated: 2019-12-30T01:23:01+05:30)

வத்திராயிருப்புஅருகே விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்வததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, காட்டெருமை,மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் விவசாயிகள் தென்னை, மா, வாழை உள்ளிட்ட பல்வேறு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கான்சாபுரம் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் அத்தி கோவில் பகுதியில் 13 ஏக்கரில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களுடன் விவசாயம் செய்து வருகிறார்.

இங்கு இரவில் தடுப்பு இரும்பு வேலிகளை உடைத்து தோப்பிற்குள் புகுந்து காட்டு யானைகள் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியும், தண்ணீர் குழாய்களை உடைத்தும் அட்டகாசம் செய்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் 140-க்கும் மேற்பட்ட ஒரு வருட தென்னங்கன்றுகளையும் யானைகள் சாப்பிட்டுள்ளது. எனவே யானைகள் வராத வகையில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story