மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த கட்டிட மேஸ்திரி அடித்துக் கொலை


மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த கட்டிட மேஸ்திரி அடித்துக் கொலை
x
தினத்தந்தி 30 Dec 2019 4:30 AM IST (Updated: 30 Dec 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்த கட்டிட மேஸ்திரி, விவசாயி உள்பட 2 பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் பொதுமக்கள் அடித்துக் கொலை செய்தனர்.

பர்கூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம்வெப்பாலம்பட்டிைய சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 31). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கஸ்தூரி (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கஸ்தூரிக்கும், கோவிந்தராஜின் தம்பி சின்னசாமிக்கும் (29) இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் கடந்த 19.5.2019 அன்று வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த கஸ்தூரியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அவர் பர்கூர் போலீசில் சரண் அடைந்தார். இதன் பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கோவிந்தராஜ், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

அரிவாள் வெட்டு

இதற்கிடையே கோவிந்தராஜிக்கும், அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த பெருமாள் (55) என்ற விவசாயிக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனால் கொலை வழக்கில் சிறை சென்று வந்த கோவிந்தராஜை ஊர் பக்கமாக வரக்கூடாது என்று பெரியவர்கள் சிலர் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் கோவிந்தராஜ் கையில் அரிவாளுடன் பெருமாளின் நிலத்திற்கு வந்தார். அங்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெருமாளை அவர் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் பெருமாளின் பின் தலையில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் கோவிந்தராஜ் அரிவாளுடன் ரத்தம் சொட்ட, சொட்ட அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

கல்லால் அடித்துக் கொலை

இதைப் பார்த்த செல்வம் என்பவர் அவரை தடுக்க சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் செல்வத்தையும் அரிவாளால் வெட்டினார். தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவரை போல அரிவாளுடன் ஊரில் சுற்றிய கோவிந்தராஜை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கற்களால் சரமாரியாக தாக்கினார்கள்.

இதில் கோவிந்தராஜ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அவரது உடலை தூக்கி அந்த பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் சிலர் போட்டு சென்றனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து அவர்கள் கொலையுண்ட கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

அதே போல பலத்த காயம் அடைந்த பெருமாளையும், செல்வத்தையும் சிகிச்சைக்காக கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர்களில் பெருமாள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.இந்த கொலை தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பர்கூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story