தூத்துக்குடியில் கிணற்றில் வீசி கைக்குழந்தை கொலை: கைதான உறவுக்காரபெண் பரபரப்பு வாக்குமூலம்


தூத்துக்குடியில் கிணற்றில் வீசி கைக்குழந்தை கொலை: கைதான உறவுக்காரபெண் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 30 Dec 2019 3:30 AM IST (Updated: 30 Dec 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இளம்பெண்ணின் கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த வழக்கில் கைதான உறவுக்கார பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் இளம்பெண்ணின் கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த வழக்கில் கைதான உறவுக்கார பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

துப்புரவு தொழிலாளி

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு முல்லைநகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 25). இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நந்தினி(20). நேற்று முன்தினம் இவர்களது 4 மாத குழந்தை செல்வகணே‌‌ஷ் வீட்டில் தொட்டிலில் தூங்கி கொண்டு இருந்தான்.

திடீரென தொட்டிலில் குழந்தை இல்லாததை பார்த்து நந்தினி அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் அவர் குழந்தையை தேடிப்பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்கம் உள்ள கிணற்றில் குழந்தை அழுதவாறு கிடந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு குழந்தை பரிதாபமாக இறந்தது.

உறவுக்கார பெண் கைது

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நந்தினியின் உறவினராக எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தை சேர்ந்த பஞ்சவர்ணம்(30) என்பவர் குழந்தையை கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் பஞ்சவர்ணத்தை கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- நான் நாமக்கல்லில் குடும்பத்துடன் வசித்து வந்தேன். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது 3 மாத குழந்தைக்கு பால் கொடுத்த போது மூச்சுத்திணறி இறந்து விட்டது. இதனால் நான் மனம் உடைந்து விட்டேன். பின்னர் தூத்துக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன்.

கடந்த சில நாட்களாக உறவினர் நந்தினியின் வீட்டில் தங்கி இருந்தேன். அப்போது, அவரது குழந்தையை தூக்க பலமுறை முயற்சி செய்தேன். நான் மனமுடைந்து காணப்படுவதால், குழந்தையை தூக்குவதற்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குழந்தையை தூக்ககூடாது என என்னை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நான் யாருக்கும் தெரியாமல் குழந்தையை தூக்கி சென்று கிணற்றில் வீசி கொலை செய்தேன்’ என கூறியுள்ளார்.


Next Story