தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 2-ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 2-ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 30 Dec 2019 4:30 AM IST (Updated: 30 Dec 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சி 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சி 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

2-ம் கட்ட தேர்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக மாவட்டத்தில் 7 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 1,542 பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 409 பதவிகளுக்கு நபர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 7 பதவிகளுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மீதம் உள்ள 1,126 பதவிகளுக்கு 3 ஆயிரத்து 561 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு கடந்த 27-ந் தேதி நடந்தது. இதில் 69.98 சதவீதம் வாக்குகள் பதிவானது.

2-ம் கட்ட தேர்தல் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், புதூர் ஆகிய 5 பஞ்சாயத்து யூனியன்களுக்கு உட்பட்ட 1,995 பதவிகளுக்கு நடக்கிறது. இதில் 720 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 1,275 பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் 3 ஆயிரத்து 561 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.

994 வாக்குச்சாவடிகள்

இந்த தேர்தலில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 248 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 3 ஆயிரத்து 433 பெண் வாக்காளர்கள், 10 திருநங்கைகள் ஆக மொத்தம் 4 லட்சத்து 691 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 302 ஒரு வார்டு வாக்குச்சாவடியும், 692 இருவார்டு வாக்குச்சாவடியும் ஆக மொத்தம் 994 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 176 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன. இதில் 80 வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். மற்ற வாக்குச்சாவடிகளில் வெப் கேமராவும், வீடியோ பதிவும் செய்யப்படுகிறது.

தேர்தல் பணிக்காக மொத்தம் 8 ஆயிரத்து 188 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே 2 கட்ட பயிற்சி முடிக்கப்பட்டு இருந்தது. நேற்று 3-வது கட்ட பயிற்சி அந்தந்த யூனியன் பகுதியில் நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் உடைமைகளுடன் வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

இன்று வாக்குப்பதிவு

5 பஞ்சாயத்து யூனியன்களிலும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பொருட்கள் 64 மண்டல குழுக்கள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.

2-ம் கட்ட தேர்தலையொட்டி போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 50 அதிவிரைவு படையினர், 16 ரோந்து படையும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் போலீசார் மோட்டார் சைக்கிளிலும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளை கண்காணிக்கும் வகையில் 13 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் ஆய்வு

2-ம் கட்ட தேர்தலுக்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாரயணன், உதவி ஆணையர் (கலால்) சுகுமார், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன், வளர்மதி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மண்டல அலுவலர்கள் மற்றும் போலீசார் மூலம் வாக்குப்பெட்டி மற்றும் இதர பொருட்கள் சரிபார்க்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. 2-ம் கட்ட தேர்தலில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசார் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குப்பெட்டி மற்றும் இதர பொருட்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்று காப்புஅறையில் (ஸ்ட்ராங் ரூம்) வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வெப் கேமரா

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிக்க வெப் கேமரா, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏற்கனவே வாக்குப்பதிவு நடந்த 7 பஞ்சாயத்து யூனியன்களுக்கு உட்பட்ட வாக்குப்பெட்டிகள் அனைத்தும் முழு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்துக்கு கொண்டு சென்று, வேட்பாளர்கள் முன்னிலையில் காப்புஅறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான ஒரு குழுவும் பாதுகாப்புக்காக உள்ளது.

முதல்கட்ட தேர்தல் நடந்த சாத்தான்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுங்குளம் பஞ்சாயத்து வேலவன்புதுக்குளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நாளை (அதாவது இன்று) மறுவாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு வாக்குப்பதிவின்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Next Story