சங்கராபுரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரமாண்ட பேரணி


சங்கராபுரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரமாண்ட பேரணி
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 1:14 PM GMT)

சங்கராபுரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

சங்கராபுரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், நாடுமுழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை வாபஸ் பெறக்கோரியும், தேசிய மக்கள் குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு பேரணி நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் தலைவர் முகமது ரபீக் தலைமை தாங்கினார். இந்திய முஸ்லிம் லீக் தேசிய இணை செயலாளர் அப்துல் பாசித், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில துணை தலைவர் சையது, சோஷியல் டெமாகிரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் ‌ஷபிக் அகமது, மனித நேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் ஹாருன் ரஷீது, மஜிலித் கட்சி மாநில செயலாளர் முஜிபுர் ரகுமான், பாப்புலர் பிரண்ட் மாவட்ட செயலாளர் தாஜூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சலாவுதீன் வரவேற்றார்.

சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தை வந்தடைந்தது. பேரணியின் போது 7 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பஸ் நிலையம் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பிரமாண்ட பேரணியில் எம்.எல்.ஏ.க்கள் சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், தி.மு.க. மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஏழுமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாறன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பாஸ்கர், சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் குமரன் மற்றும் ஏராளமான முஸ்லிம்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

பேரணியின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மகேஷ், ராமநாதன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story