பீளேர் அருகே, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி


பீளேர் அருகே, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி
x
தினத்தந்தி 31 Dec 2019 3:30 AM IST (Updated: 30 Dec 2019 7:41 PM IST)
t-max-icont-min-icon

பீளேர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

ஸ்ரீகாளஹஸ்தி, 

சித்தூர் மாவட்டம் பீளேர் அருகே இந்திரம்ம காலனி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி பார்கவி. இவர்களுடைய மகன் நிஷாந்த் (வயது 5). இவன் பீளேரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான். லோகேஷ் மற்றும் பார்கவி பீளேரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நிஷாந்த் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தான். பின்னர் வீட்டின் முன்பு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

பின்னர் அருகில் புதிய கட்டிட கட்டுமான பணியில் இருந்த வீட்டிற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான். இதனை யாரும் கவனிக்கவில்லை.

இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் பார்கவி மகனை அனைத்து பகுதிகளிலும் தேடினார். பின்னர் கட்டுமான பணியில் இருந்த தண்ணீர் தொட்டி அருகில் சென்று பார்த்தபோது நிஷாந்த் தண்ணீரில் மிதந்தபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவனை பீளேர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் டாக்டர்கள் ஏற்கனவே தண்ணீருக்குள் மூச்சு திணறி சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பீளேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story