தேனி அருகே வடபுதுப்பட்டி வாக்குச்சாவடியில், வேட்பாளர்களின் வரிசை எண் மாறியதால் பரபரப்பு


தேனி அருகே வடபுதுப்பட்டி வாக்குச்சாவடியில், வேட்பாளர்களின் வரிசை எண் மாறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Dec 2019 10:00 PM GMT (Updated: 30 Dec 2019 5:38 PM GMT)

தேனி அருகே வடபுதுபட்டியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வேட்பாளர்களின் வரிசை எண்ணை மாற்றி படிவத்தை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளர்களின் முகவர்களின் வாக்குவாதத்தை தொடர்ந்து திருத்தப்பட்ட படிவம் ஒட்டப்பட்டது.

தேனி,

தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள முத்தாலம்மன் இந்து தொடக்கப்பள்ளியில் 6 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த வாக்குச்சாவடியில், நேற்று காலை 7 மணிக்கு திட்டமிட்டபடி வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த 6 வாக்குச்சாவடிகளுக்கும் வெளிப்புற சுவரில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் குறித்த விவரங்கள் வாக்குச்சீட்டில் உள்ள வரிசைப்படி தயாரிக்கப்பட்டு அதற்குரிய படிவம் பெரிய அளவில் ஒட்டப்பட்டு இருந்தன. ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் தி.மு.க. வேட்பாளரின் பெயரும், சின்னமும் வரிசை எண் 2-ல் இடம் பெற்று இருந்தது. ஆனால், சுவரில் ஒட்டப்பட்ட படிவத்தில் தி.மு.க. வேட்பாளரின் பெயரும், சின்னமும் வரிசை எண் 1-ல் இடம் பெற்று இருந்தது. அதேபோல், மற்றொரு வேட்பாளரின் வரிசை எண்ணும் மாறி இருந்தது.

இதனால் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதை மாற்ற வேண்டும் என்று வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் அதை உடனே சரி செய்ய வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பல்லவி பல்தேவுக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக சுவர்களில் ஒட்டிய படிவங்களை அகற்றிவிட்டு, புதிய படிவங்களை ஒட்டுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அங்கு ஒட்டப்பட்டு இருந்த படிவங்கள் அகற்றப்பட்டன. பின்னர், வாக்குச்சீட்டில் உள்ள வரிசையின் அடிப்படையில் புதிதாக படிவங்கள் எழுதப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி முன்பும் ஒட்டப்பட்டது. இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story