கிரிசமுத்திரம் ஊராட்சியில், தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் - குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை


கிரிசமுத்திரம் ஊராட்சியில், தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் - குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 Dec 2019 3:15 AM IST (Updated: 30 Dec 2019 11:41 PM IST)
t-max-icont-min-icon

கிரிசமுத்திரம் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று குறை தீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர், விதவை, ஊனமுற்றோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதி, ஊனமுற்றோருக்கு மோட்டார் சைக்கிள், பசுமை வீடுகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

தமிழக கிராம ஊராட்சி மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி இயக்குபவர், துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் கொடுத்துள்ள மனுவில், அரசாணைப்படி கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அகவிலைப்படி உயர்வு சேர்த்து ஊதியம் வழங்க ஆணை வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

அதேபோல் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மூக்கனூர் ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கும் பணியாளர்கள் தங்களுக்கு 35 மாத ஊதியம் பாக்கியாக உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே நிலுவையுடன் ஊதியம் வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.

வாணியம்பாடி வட்டம், கிரிசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், கிரிசமுத்திரம் ஊராட்சி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆம்பூர் சாணாங்குப்பம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், இப்பகுதியில் தனியார் ஒருவர் கல்குவாரி மற்றும் ஜல்லி எந்திரம் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறார், இதன் அருகே விவசாய நிலங்கள், வீடுகள், வீட்டுமனைகள், பொது குடிநீர், ஆழ்துளை கிணறுகள் அமைந்திருக்கிறது. கால்நடைகள் அதிகமாக உள்ளது. தொழிற்சாலை அமைய உள்ள இடத்தில் கோவில்கள் உள்ளன. கல்குவாரி அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள் அழிந்து கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள், கல்குவாரி தூசியினால் மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும். எனவே இந்த இடத்தில் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்க கூடாது என மனு அளித்தனர்.

பொம்மிகுப்பத்தை தனி தாலுகாவாக அமைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கூட்டத்தில் பிரகா‌‌ஷ், வள்ளியம்மாள், கவிதா, பார்வதி ஆகியோருக்கு முதியோர் மற்றும் விதவைத்தொகை பிற்பட்டோர் நலத்துறை சார்பில் சுதா என்ற பெண்ணுக்கு தையல் எந்திரம் ஆகியவற்றை கலெக்டர் சிவன்அருள் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், குறைதீர்வு நாள் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனுக்களை பரிசீலனை செய்து பொதுமக்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு துறை வாரியாகவும் தரப்பட்ட மனுக்கள் குறித்து நோட்டில் பதிவு செய்து விபரம் தெரிவித்து, துறை அதிகாரிகளிடம் கையெழுத்து பெற வேண்டும். வேலைவாய்ப்பு துறை சார்பில் அடுத்த வாரத்திற்குள் வேலைவாய்ப்பு முகாம், மாற்றுத்திறனாளிகள் முகாம் நடத்தப்பட வேண்டும் என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், கலெக்டர்அலுவலக மேலாளர் பாக்கியலட்சுமி உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story