2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: 9 ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு


2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: 9 ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Dec 2019 10:45 PM GMT (Updated: 30 Dec 2019 6:30 PM GMT)

2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

கலசபாக்கம்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் திருவண்ணாமலை, அனக்காவூர், செய்யாறு, கீழ்பென்னாத்தூர், பெரணமல்லூர், தண்டராம்பட்டு, தெள்ளார், துரிஞ்சாபுரம், வெம்பாக்கம் ஆகிய 9 ஒன்றியங்களில் கடந்த 27-ந் தேதி நடந்தது.

இந்த நிலையில் நேற்று ஆரணி, மேற்கு ஆரணி, கலசபாக்கம், போளூர், செங்கம், சேத்துப்பட்டு, வந்தவாசி, ஜவ்வாதுமலை, புதுப்பாளையம் ஆகிய 9 ஒன்றியங்களில் 2-ம் கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த 9 ஒன்றியங்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 61 ஆயிரத்து 951 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் ஓட்டு போடும் வகையில் 1,590 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்குப்பதிவின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எலத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிரு‌‌ஷ்ணமூர்த்தி வாக்களித்தார். அதேபோல் கலசபாக்கம் அருகே கப்பலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடலாடி அரசு தொடக்கப்பள்ளியில் இளம்பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் 93 ஆயிரத்து 174 வாக்காளர்கள் உள்ளனர். மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் 86 ஆயிரத்து 707 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மனைவி மணிமேகலை, மகன்கள் சந்தோ‌‌ஷ்குமார், விஜயகுமார் ஆகியோருடன் காலை 7 மணிக்கு சேவூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்குப்பதிவு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் செய்ய வேண்டிய பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 ஆண்டுகளில் நிறைவேற்றி தந்துள்ளார். இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்களும் நல்லாட்சியை தேர்வு செய்திட வாக்களிக்க தயாராகிவிட்டார்கள். உள்ளாட்சியில் அனைத்து இடங்களையும் அ.தி.மு.க. கைப்பற்றும் என்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளருமான ஆர்.எம்.பாபுமுருகவேல் தனது மனைவி பிரீத்தியுடன் சேவூர் ஊராட்சியில் ரகுநாதபுரம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தார்.

சேவூர் ரகுநாதபுரம் 6-வது வார்டு வாக்குச்சாவடி மையத்தில் தமிழ்செல்வி என்ற பெண்ணின் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறி வாக்களிக்க அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் முகவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பையூர் கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நரிக்குறவர் பெண்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். சில இடங்களில் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி வாக்கு சேகரித்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 கிராமங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. ஆர்.குண்ணத்தூர் ஊராட்சியில் பெண் வாக்காளர்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பக்கரிபாளையம், கரியமங்கலம், பேயாளம்பட்டு, கொட்டகுளம், குப்பநத்தம், தீத்தாண்டப்பட்டு, புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகுளம், ஆலத்தூர், பனைஓலப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக ஆர்வத்துடன் காலை முதல் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

Next Story