மாவட்ட செய்திகள்

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், 4 பேர் தீக்குளிக்க முயற்சி + "||" + Villupuram Collector Office, 4 people trying tikkulikka

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், 4 பேர் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், 4 பேர் தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

அந்த சமயத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வானூர் தாலுகா வாழப்பட்டாம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 45) என்பவர் தனது மகள் ஓவியா (14), மகன் யுவராஜ் (12) ஆகியோருடன் தங்கள் மீது மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று கார்த்திகேயன் உள்ளிட்ட 3 பேரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் கார்த்திகேயனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், நான் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் வேலை செய்து வந்தேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நான் விடுமுறை கேட்டேன். அதற்கு அனுமதி அளிக்காததால் இதுபற்றி தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டேன். தற்போது அதனை தெரிந்துகொண்ட அந்த எஸ்டேட் மேலாளர் என்னை பணிநீக்கம் செய்துவிட்டார். வேலைக்கு செல்ல முடியாததால் எனது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. எனவே தாங்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எனக்குரிய ந‌‌ஷ்ட ஈடும் மற்றும் திரும்பவும் வேலையை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் அசம்பாவித சம்பவத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக கார்த்திகேயன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதேபோல் விக்கிரவாண்டி அருகே வி.சாத்தனூரை சேர்ந்த கிரு‌‌ஷ்ணமூர்த்தி (60) என்பவர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தன் மீது மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே அவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

அப்போது போலீசாரிடம் கிரு‌‌ஷ்ணமூர்த்தி கூறுகையில், எனக்கு சொந்தமான நிலத்தை பக்கத்து நிலத்துக்காரரிடம் குத்தகைக்கு விட்டிருந்தேன். 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது என்னுடைய நிலத்திற்கு நான் பட்டா வாங்கியுள்ளதால் சொந்த பயன்பாட்டிற்கு நிலத்தை திருப்பி ஒப்படைக்குமாறு கேட்டதற்கு அவர் நிலத்தை கொடுக்க முடியாது என்றும், அந்த நிலம் தனக்கு சொந்தமானது என்றும் கூறி என்னை மிரட்டி வருகிறார். இதுபற்றி விக்கிரவாண்டி போலீசாரிடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்னுடைய நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார்.இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் அசம்பாவித சம்பவத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக கிரு‌‌ஷ்ண மூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் முதியோர் ஓய்வூதிய தொகை, கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 401 பேர் மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. வங்கி கடனுக்காக வீடு, நிலத்தை ஜப்தி செய்ய முயன்ற போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி - பல்லடம் அருகே பரபரப்பு
பல்லடம் அருகே வங்கி கடனுக்காக வீடு, நிலத்தை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்ய முயன்ற போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-