குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சேலத்தில் வீட்டின் முன்பு கோலம் போட்ட பெண்கள் - போலீசார் எச்சரிக்கை
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சேலத்தில் வீட்டின் முன்பு கோலம் போட்ட பெண்களை போலீசார் எச்சரித்தனர்.
சேலம்,
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்கள் கோலம் போட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் தென் அழகாபுரம் பகுதியில் பெண்கள் பலர் தங்களுடைய வீட்டின் முன்பு குடியுரிமை திருத்த சட்டம் வேண்டாம் என்று கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதேபோல் பள்ளப்பட்டி, சாமிநாதபுரம், அய்யந்திருமாளிகை என மாநகரில் சில இடங்களில் பெண்கள் பலர் தங்களுடைய வீடுகளின் முன்பு கோலம் போட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த பகுதிகளுக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் கோலம் போட்டவர்களிடம், இதை உடனடியாக அழிக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனால் அந்த பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் தங்களுடைய கைகளில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாசகங்களை மெகந்தி மூலம் எழுதியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story