2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ராமன் ஆய்வு


2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ராமன் ஆய்வு
x
தினத்தந்தி 30 Dec 2019 10:30 PM GMT (Updated: 30 Dec 2019 7:48 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நிலவரம் குறித்து வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல் மற்றும் வாழப்பாடி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,173 வாக்குச்சாவடிகளில் நேற்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி, முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஆகியவற்றில் மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்குப்பதிவு நிலவரம் குறித்தும், வாக்காளர்கள் எளிதாக வாக்களிப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கலெக்டர் ராமன் கேட்டறிந்தார். மேலும், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டுகள் சரியாக உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றதை கலெக்டர் ராமன் அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், சேலம் உதவி கலெக்டர் மாறன், உதவி திட்ட அலுவலர் பிரியா, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

இதனிடையே, வாழப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தம்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிலவரத்தை மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, 209, 210, 211 ஆகிய வாக்குச்சாவடிகளில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்குச்சீட்டில் முன்பக்கம் குத்தப்பட்டிருந்த அரசு முத்திரை பின்பக்கமும் தெரிந்தது. இது குறித்து அங்கிருந்த வாக்காளர்கள் சிலர், கலெக்டரிடம் தெரிவித்து முறையிட்டனர். இதையடுத்து உடனடியாக அந்த வாக்குச்சீட்டுகளை அப்புறப்படுத்தி, வேறு புதிய வாக்குச்சீட்டுகள் பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இதனால் முத்தம்பட்டி வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story