விவசாய பாசனத்துக்கு வீடூர் அணை தண்ணீர் - அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்
விவசாய பாசனத்துக்கு வீடூர் அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே உள்ளது வீடூர் அணை. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேல்மலையனூர், செஞ்சி ஆகிய பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக கடந்த 1-ந் தேதிஅன்று அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 32 அடியை எட்டியது.
இதையடுத்து அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று பாசன விவசாயிகள் பலரும், அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் நேற்று காலை வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். திண்டிவனம் சப்-கலெக்டர் அனு டெய்சி முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு, வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக வினாடிக்கு 125 கன அடி தண்ணீரை திறந்து வைத்தார். அந்த தண்ணீரானது பாசன கால்வாயில் சீறிப்பாய்ந்து சென்றது. அந்த தண்ணீரில் அமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் மற்றும் விவசாயிகளும் மலர்தூவினர். அதன் பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வீடூர் அணை பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் இன்றைக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து ஒருபோக பாசனத்திற்கு போதிய அளவில் தண்ணீர் இருக்கும் தருவாயில் வருகிற மே மாதம் 12-ந் தேதி வரை 135 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீரை திறந்துவிட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த தண்ணீர் மூலம் தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டத்தில் சிறுவை, வீடூர், பொம்பூர், பொன்னம்பூண்டி, கோரக்கேணி, ஐவேலி, நெமிலி, எறையூர், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாங்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் 2,200 ஏக்கரும், புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களும் என மொத்தம் 3,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயனடைவார்கள்.
மேலும் வீடூர் அணையை தூர்வார வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைத்து அவரது உத்தரவின்படி அணையை தூர்வாருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, விவசாயிகள் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, மாசிலாமணி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஞானசேகரன், உதவி செயற்பொறியாளர் சுமதி, நடுவநந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் புலியனூர் ஆர்.விஜயன், மாநில பொதுக்குழு பன்னீர், மயிலம் ஒன்றிய செயலாளர் சேவல் சேகரன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் மனோகரன், மேலவை பிரதிநிதி சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், சம்பந்தம், சின்னதச்சூர் கூட்டுறவு சங்க தலைவர் சரவணக்குமார், முன்னாள் தலைவர்கள் ரவி, சுப்பிரமணி, முன்னாள் துணைத்தலைவர் மணிகண்டன் மற்றும் ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள், பொதுப்பணித்துறையினர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story