2-வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு


2-வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Dec 2019 10:30 PM GMT (Updated: 2019-12-31T01:18:34+05:30)

திருப்பூர் மாவட்டத்தில் 2-வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

திருப்பூர், 

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2-வது கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, பொங்கலூர், குடிமங்கலம், குண்டடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 920 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

அவினாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புதுப்பாளையம் ஊராட்சி சாமந்த கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வஞ்சிப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையங்களை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று காலை ஆய்வு செய்தார்.

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கேத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வாவிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, துத்தாரிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கள்ளப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, முத்தியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, எரகாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் தேர்தல் தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

ஆய்வு குறித்து கலெக்டர் கூறும்போது, திருப்பூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. 158 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டது. 53 வாக்குச்சாவடிகளில் இணையதள கண்காணிப்பும், 47 வாக்குச்சாவடிகளில் வீடியோகிராபர் மூலமாகவும், 58 வாக்குச்சாவடி கள் தேர்தல் நுண்பார்வையாளர்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு முடிந்ததும் உரிய பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு ஓட்டுப்பெட்டிகள் கொண்டு செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வில் திட்ட இயக்குனர்(மகளிர் திட்டம்) கோமகன், அவினாசி, பொங்கலூர், குடிமங்கலம், குண்டடம் ஆகிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள், அவினாசி, பல்லடம் தாசில்தார்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story