பேரணாம்பட்டு அருகே, வாழைத்தோட்டத்தை சூறையாடிய யானைகள் கூட்டம் - விவசாயியை விரட்டியது


பேரணாம்பட்டு அருகே, வாழைத்தோட்டத்தை சூறையாடிய யானைகள் கூட்டம் - விவசாயியை விரட்டியது
x
தினத்தந்தி 30 Dec 2019 10:15 PM GMT (Updated: 30 Dec 2019 7:55 PM GMT)

பேரணாம்பட்டு அருகே வாழைத்தோட்டத்தை யானைகள் சூறையாடியது.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே மிட்டப்பல்லி, மதினாப்பல்லி, மசிகம் பகுதியில் நேற்று முன்தினம் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானைக்கூட்டம் வனத்துறையினரால் விரட்டப்பட்டது. இதையடுத்து மசிகம் தேன்மலைபாதை வழியாக யானைகள் கூட்டம் சென்றது.

மசிகம் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 53), விவசாயி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் நடைபெற்று வரும் வெல்லம் தயாரிக்கும் பணியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது யானைக்கூட்டம் அவரை விரட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மோட்டார் சைக்கிளை திருப்ப முடியாமல் அப்படியே கீழே போட்டு விட்டு தலைதெறிக்க தப்பியோடினார்.

பின்னர் யானைகள் கூட்டம் அங்குள்ள செங்கல் சூளைக்குள் புகுந்து சூளையிடப்பட்டிருந்த 500 செங்கற்களை துவம்சம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதையடுத்து பத்தலப்பல்லி கிராமவனப்பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள முருகன் கோவில் அருகில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 1 ஏக்கர் தீவனப்பயிரை மிதித்து நாசப்படுத்தியது. பின்னர் எருக்கம்பட்டு கிராமத்தில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி பின்புறம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள வினோத்கண்ணா என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்துக்கு புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த குலையுடன் கூடிய 350 வாழைமரங்களை சூறையாடின.

மேலும் 2 தென்னை செடிகள் மிதித்தும், ரகுபதி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தக்காளி தோட்டம், தீவனப்பயிர், நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 6 கல்கம்பங்களை சாய்த்தும், மாமரக்கிளைகளை முறித்தும், வஜ்ஜிரவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 2 மாசெடிகளை பிடுங்கி எறிந்தும் அங்குள்ள மாமரக்கிளைகளை முறித்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டன.

அதிகாலை சுமார் 3 மணியளவில் யானைகள் கூட்டத்தை பார்த்த விவசாயிகள், கிராமமக்கள் அதிர்ச்சியடைந்து விரட்ட முயன்றனர். ஆனால் அதே பகுதியில் பிளிறியவாறு சுற்றி வந்தது. இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பேரணாம்பட்டு வனவர்கள் ஹரி, ஆனந்தன், மற்றும் வனகாப்பாளர்கள் ராஜேந்திரன், பிரபா ஆகியோர் கிராமமக்கள் உதவியுடன் பட்டாசு, வெடி, பாணம் வெடித்து, தாரை, தப்பட்டை அடித்து 2½ மணி நேரம் போராடி அதிகாலை 5.30 மணியளவில் ஆத்துப்பாய்நாய்க்கனேரி காப்புகாட்டிற்கு விரட்டினர்.

எருக்கம்பட்டு ஊருக்கு மிக அருகில் யானைகள் கூட்டம் புகுந்ததால் கிராமமக்கள் பீதிடையந்து காணப்படுகின்றனர். யானைகள் வருவதை தடுக்க சோலார்மின் வேலிகள், அகழிகள் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

காட்டுயானைகளால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை காத்தவராயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, வனத்துறையினர் உடன் இருந்தனர்.

Next Story