கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீ்க்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தென் கீரனூர் கிராமத்தை சேர்ந்த வெள்ளைக்காசி மகன் மாற்றுத்திறனாளி ரவிக்குமார்(வயது 27) வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வந்ததும், அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து வந்து ரவிக்குமாரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண் குராலா விரைந்து வந்து ரவிக்குமாரிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளியான எனக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை 3 சக்கர மோட்டார் சைக்கிள் வாங்கி தந்தார். அந்த மோட்டார் சைக்கிளில் சென்று டீ மற்றும் துணி வியாபாரம் செய்து வந்தேன். இந்த நிலையில் எனது தந்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மேலும் 3 சக்கர மோட்டார் சைக்கிளும், அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இதனால் எனக்கு புதிதாக 3 சக்கர மோட்டார் சைக்கிள் கேட்டு ஏற்கனவே விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தேன். இருப்பினும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான் இங்கு மனு கொடுப்பதற்காக வந்தேன் என்றார். பின்னர் கலெக்டர் கிரண் குராலா கூறுகையில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி 3 சக்கர மோட்டார் சைக்கிள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித் தார். கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story