அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்க அனுமதிக்கக்கோரி, தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்க அனுமதிக்கக்கோரி திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் சிம்மநல்லூர் ஊராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து தாசில்தார் மீனாதேவி மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மணியக்காரன்பட்டி மந்தை பகுதியில் உள்ள அய்யப்பன் கோவில் முன்பு ஒவ்வொரு ஆண்டும் அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்திவிட்டு சபரிமலைக்கு செல்வது வழக்கம். கடந்த 1998-ம் ஆண்டு அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்குவதில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.
பின்னர் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந்தேதி ஒரு தரப்பினரும், 7-ந்தேதி மற்றொரு தரப்பினரும் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த பல ஆண்டுகளாக அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியை நாளை (புதன்கிழமை) நடத்த கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர். அதனாலேயே தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்றனர். அதன் பின்னர் பேசிய அதிகாரிகள், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த ஆண்டு மட்டும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியை நிறுத்தி வைக்கலாமே என்று கூறினர். ஆனால் அதனை கிராம மக்கள் ஏற்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பிரச்சினை ஏற்படாத வகையில் இரு பிரிவினரும் குறிப்பிட்ட தேதிகளில் தனித்தனியாக பூக்குழி இறங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story