2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 80.92 சதவீதம் வாக்குப்பதிவு


2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 80.92 சதவீதம் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Dec 2019 10:45 PM GMT (Updated: 2019-12-31T02:41:37+05:30)

சேலம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக நடந்த 8 ஊராட்சி ஒன்றியங்களில் 80.92 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி எடப்பாடி, கொங்கணாபுரம், ஓமலூர் உள்பட 12 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27-ந் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 81.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதற்காக 1,173 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 6 லட்சத்து 68 ஆயிரத்து 799 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தல் மூலம் 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர், 191 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 1,683 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 2,005 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 5 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 244 கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் என 251 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மீதியுள்ள 1,754 பதவிகளுக்கு மட்டும் 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த உள்ளாட்சி தேர்தல் களத்தில் 5 ஆயிரத்து 923 வேட்பாளர்கள் உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேரம் செல்ல, செல்ல வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள் என அனைத்து வாக்காளர்களும் காலையிலே ஆர்வமுடன் வந்து வாக்களித்து சென்றதை காணமுடிந்தது.

அதாவது, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்லுக்கு பச்சை நிறத்திலும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சேலம் மாநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட வீராணம், தைலானூர், வலசையூர் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு குறித்து மாநகர போலீஸ் துணை கமி‌‌ஷனர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோர் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் வாக்குச்சாவடிகளில் யாராவது தகராறு செய்தால் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு அறிவுரை வழங்கினர். வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு தொலைவில் அரசியல் கட்சியினர் நின்று கொண்டு தங்களது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களை போலீசார் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

வீரபாண்டி தொகுதி பி.மனோன்மணி எம்.எல்.ஏ., தனது சொந்த ஊரான பாரப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். ஆத்தூர் தொகுதி சின்னதம்பி எம்.எல்.ஏ. தனது சொந்த ஊரான ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியிலும், கெங்கவல்லி தொகுதி மருதமுத்து எம்.எல்.ஏ. புளியங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியிலும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.

அதேபோல், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் நேற்று காலை பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் புத்திரகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சன்னியாசிகுண்டு அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மேட்டுப்பட்டி தாதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை முதல் மதியம் வரையிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து சென்றனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மாவட்டத்தில் மாலை 5 மணிக்கு பின்னர் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் டோக்கன் பெற்று வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்துக்கு ெகாண்டு செல்லப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் 80.92 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் நடந்த 8 ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம் சதவீதத்தில் வருமாறு:-

ஆத்தூர்- 77.87, அயோத்தியாப்பட்டணம்-83.86, கெங்கவல்லி-74.06, பெத்தநாயக்கன்பாளையம்-80.04, பனமரத்துப்பட்டி-84.22, சேலம்-83.17, தலைவாசல்-78.53 மற்றும் வாழப்பாடி-84.14.

இதில் அதிகப்பட்சமாக பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் 84.22 சதவீதமும், குறைந்த பட்சமாக கெங்கவல்லி ஒன்றியத்தில் 74.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story