உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? - வாக்காளர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு


உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? - வாக்காளர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 31 Dec 2019 4:00 AM IST (Updated: 31 Dec 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 27-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் யார்? யார்? வெற்றி பெறுவார்கள் என்று வாக்காளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி, 

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 27-ந் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று 92,729 ஆண் வாக்காளர்களும், 97,577 பெண் வாக்காளர்களும், 23 திருநங்கைகள் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த ஒன்றியத்தில் 54 பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகள் உள்ளன. மேலும் 429 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிகள் இருக்கிறது. 31 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், மாவட்ட பஞ்சாயத்துக்கு தேவையான 3 உறுப்பினர்கள் இந்த ஒன்றியத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 54 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 243 பேர் போட்டியிட்டனர். அதேபோல் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 1,163 பேரும், 31 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 188 பேரும், 3 மாவட்ட பஞ்சாயத்து பதவிகளுக்கு 23 பேர் போட்டியிட்டனர். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 326 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இதில் 15 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இளம் வாக்காளர்கள், முதியவர்கள் என பெரும்பாலானவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவின் முடிவில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 965 பேர் மட்டுமே வாக்களித்தனர். இது 69.86 சதவீதம் ஆகும்.

வாக்குச்சாவடிகளில் பயன் படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பெட்டிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு 4 அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அறைகளில் கம்புகள் கட்டும் பணியும் தொடங்கி உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2-ந்தேதி தனியார் பள்ளி அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து தடை செய்ய தேவையான தடுப்பு கம்பிகளும் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 54 பஞ்சாயத்துகள் இருந்தாலும் ஆனையூர், தேவர்குளம், சாமிநத்தம், செங்கமலநாச்சியார்புரம், பள்ளப்பட்டி, நாரணாபுரம், அனுப்பன்குளம், விஸ்வநத்தம், சித்துராஜபுரம் ஆகிய 9 பெரிய பஞ்சாயத்து தலைவர் பதவியை பிடிக்க கடுமையான போட்டிகள் நடைபெற்றன. இதில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு சமமாக சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் செய்தனர்.

இதே போல் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 31 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதை பிடிக்க அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கடுமையாக முயற்சி செய்தது. இதற்கிடையில் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் களத்தில் இறங்கி எங்களாலும் சரிக்கு சரியாக போட்டியிட முடியும் என்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். 16 ஒன்றிய கவுன்சிலர் பதவியை பிடிக்கும் கட்சி தான் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்ற முடியும். இதற்காக அ.தி.மு.க., தி.மு.க. மத்தியில் கடும் போட்டிநடைபெற்றது.

மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற மர்மம் விலகாத நிலையில் சிவகாசி ஒன்றியத்தை எங்கள் கட்சி தான் பிடிக்கும் என அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கூறி வருகிறார்கள். ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒன்றிய கவுன்சிலர் வார்டுகளில் எத்தனை வார்டுகள் எந்த கட்சிக்கு கிடைக்கும் என்ற கேள்வி தற்போது வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஊராட்சி நிர்வாகத்தை கையில் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை 2-ந்தேதி நடைபெற்றாலும், இதில் எந்த கட்சிக்கும் 16 ஒன்றிய கவுன்சிலர்கள் கிடைக்கவில்லை என்றால் யார்? யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்றும் தற்போது பொதுமக்கள் தங்களது கருத்துகளை கூறி வருகிறார்கள். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நாங்கள் தனியாக இந்த ஒன்றியத்தை கைப்பற்றுவோம் என்று கூறி வரும்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உதவி இல்லாமல் யாரும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்ற முடியாது என்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.

இதற்கிடையே மாவட்ட நிர்வாகி ஒருவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விருதுநகர் மாவட்டத்தில் 2 ஒன்றியங்களை கைப்பற்றும் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற அச்சத்தில் உள்ள வேட்பாளர்களுக்கு விடை கிடைக்கவும், மக்கள் கூறி வரும் கருத்துகள் எந்த அளவு முடிவுகளில் எதிரொலிக்கும் என்றும் வாக்கு எண்ணிக்கை நாளான வருகிற 2-ந்தேதி இரவுக்குள் தெரியவரும்.

Next Story