உள்ளூரில் வாக்குச்சாவடி இல்லை; வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்
காரைக்குடி அருகே சொந்த கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்காததால் வாக்களிக்க கிராம மக்கள் மறுத்தனர். இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வாக்களித்தனர்.
காரைக்குடி,
தமிழகத்தில் நேற்று 2-வது கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான வாக்காளர்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று உற்சாகமாக வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்தநிலையில் சிவகங்கை மாவட்டத்தில் கல்லல், சாக்கோட்டை, தேவகோட்டை, கண்ணங்குடி, சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூர் ஆகியவற்றில் தேர்தல் நடைபெற்றது. இந்தநிலையில் காரைக்குடி அருகே சாக்கோட்டை யூனியனுக்குட்பட்ட சின்னவேங்காவயல் கிராமத்தில் சுமார் 900 ஓட்டுகள் உள்ளது. இந்த கிராம மக்கள் ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரியவேங்காவயல் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து விட்டு மீண்டும் திரும்பும் நிலையில் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை.
இதையடுத்து கிராம மக்கள், தங்களுக்கு ஒவ்வொரு முறையும் வாக்குச்சாவடி மையத்தை தங்களது கிராமத்தில் அமைக்காமல் வேறு கிராமத்திற்கு கொண்டு சென்று அமைப்பதால் அதிக தூரம் சென்று வருவதாகவும், இதனால் வயதானவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்கள் கடுமையாக சிரமமடைந்து வருகின்றனர் என்று கூறி தங்களது வாக்குகளை செலுத்த மாட்டோம் என்று தீர்மானித்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தேர்தல் முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிம் இதுகுறித்து மனுவாக கொடுங்கள். அப்போது அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இப்போது நீங்கள் உங்களது ஓட்டுகளை போட்டு ஜனநாயக உரிமையை பெறுங்கள் என்று கூறினர். இதையடுத்து பெரிய வேங்காவயல் கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு சில வாக்காளர்கள் வாகனங்களிலும், சிலர் நடந்தே சென்று வாக்களித்து விட்டு திரும்பினர்.
இதேபோல் காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற பகுதிக்குட்பட்ட தேவகோட்டை ரஸ்தா பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு நேற்று 13 திருநங்கைகள் அவர்களின் தலைவர் விந்தியா தலைமையில் வந்து ஓட்டளித்து தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்டினர். இவர்கள் காரைக்குடி அருகே அரியக்குடி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் வாக்களிக்கும் உரிமை பெற்று, தற்போது வரை தவறாமல் வாக்களித்து வருகின்றனர். இதேபோல் காரைக்குடி அருகே கல்லல் யூனியனுக்குட்பட்ட கூத்தலூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் சுமார் 23 வயதுடைய மாற்றுதிறனாளியான உயரம் குறைந்த பெண் வாக்காளர் ஒருவர் உற்சாகமாக வந்து வாக்களித்தார். இதேபோல் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் யூனியன் பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு உயரம் குறைந்த 2 மாற்றுத்திறனாளி பெண்கள் வந்து தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story