மரணமடைந்த பெஜாவர் மடாதிபதி பங்கேற்ற இறுதி நிகழ்ச்சி குழந்தைகளுக்கு ஆன்மிகம், கலாசாரம் பற்றி கற்பிக்க வேண்டும் என பேச்சு


மரணமடைந்த பெஜாவர் மடாதிபதி பங்கேற்ற இறுதி நிகழ்ச்சி குழந்தைகளுக்கு ஆன்மிகம், கலாசாரம் பற்றி கற்பிக்க வேண்டும் என பேச்சு
x
தினத்தந்தி 31 Dec 2019 5:34 AM IST (Updated: 31 Dec 2019 5:34 AM IST)
t-max-icont-min-icon

மரணமடைந்த பெஜாவர் மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி இறுதியாக பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், குழந்தைகளுக்கு ஆன்மிகம், கலாசாரத்தை கற்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

பெங்களூரு,

உடுப்பியில் உள்ள பிரசித்தி பெற்ற பெஜாவர் மடத்தின் 32-வது மடாதிபதியாக விஸ்வேசுவர தீர்த்த சுவாமி இருந்தார். இவருக்கு கடந்த 20-ந்தேதி திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மணிப்பாலில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவாரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்தன.

இதைதொடர்ந்து நேற்று முன்தினம் இறுதி ஆசையை நிறைவேற்ற அவர் பெஜாவர் மடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இதைதொடர்ந்து அவரது உடல் பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வித்யாபீடத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ராகுல்காந்தி, முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி மரணமடைவதற்கு முன்பு இறுதியாக பங்கேற்ற நிகழ்ச்சி பற்றியும், அதில் அவர் இறுதியாக என்ன பேசினார் என்பது பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

உடுப்பியில் உள்ள பஜாக ஆனந்த தீர்த்த கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா கடந்த 19-ந்தேதி மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மறைந்த விஸ்வேசுவர தீர்த்த சுவாமி கலந்துகொண்டார். அவர் பள்ளி குழந்தைகளின் நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நடன நிகழ்ச்சியையும் மிகவும் ரசித்து பார்த்து கைதட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

பின்னர் அவர் பல்வேறு விளையாட்டு போட்டிகள், தேர்வுகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார். அதைதொடர்ந்து மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி பேசியிருந்ததாவது:-

நாம் ஆன்மிகம், கலாசாரம், பண்பாட்டு கல்வியை கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கி வருகிறோம். இதனை பரப்புவதற்காக தான் நான் 90 வயதை தொட்ட நிலையிலும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். தாய்மொழி என்பது நமது தாயை போன்றது. எனவே கன்னட மக்கள் நமது தாய்மொழியான கன்னட மொழியை எப்போதும் மறக்கக் கூடாது. தாய்மொழி மீது மிகுந்த பற்று கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு தாய்மொழியை கற்பிக்க முன்வர வேண்டும்.

கிருஷ்ணரின் தாய் யசோதா. அவரது இன்னொரு தாய் தேவகி. தாய்மொழியுடன் ஆங்கில மொழியையும் கற்றுக்கொள்ளலாம். நாம் வசிக்கும் நாட்டின் கலாசாரம், சாஸ்திரங்கள், வேதாந்தம், பண்பாடு பற்றி அனைவரும் தெரிந்திருப்பது அவசியம். இந்துக்கள் தங்களது குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம் கற்றுக்கொடுக்க வேண்டும். வேதாந்தம் மற்றும் கலாசாரம் பற்றிய ஞானம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தேவை. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆன்மிக கல்வியை வழங்குகிறார்கள். அதுபோல் இந்துக்களும் நமது குழந்தைகளுக்கு ஆன்மிக கல்வியை கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

Next Story