பெங்களூருவில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை: முன்னாள் கூடைபந்து வீரர் உள்பட 6 பேர் கைது 4 துப்பாக்கிகள், 8 குண்டுகள் பறிமுதல்


பெங்களூருவில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை: முன்னாள் கூடைபந்து வீரர் உள்பட 6 பேர் கைது 4 துப்பாக்கிகள், 8 குண்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 31 Dec 2019 5:52 AM IST (Updated: 31 Dec 2019 5:52 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சட்ட விரோதமாக துப்பாக்கி விற்பனை செய்து வந்த முன்னாள் கூடைபந்து வீரர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள், 8 குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு காட்டன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பின்னிமில் மைதானம் அருகே கொள்ளையடிக்க திட்டமிட்டு ஒரு கும்பல் காத்திருப்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று (நேற்று முன்தினம்) இரவு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார், பின்னமில் மைதானம் அருகே சந்தேகப்படும் படியாக சுற்றிய 6 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த கும்பலிடம் துப்பாக்கிகள், குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டு காத்து இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 6 பேரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த அஸ்லாம் (வயது 45), தர்மண்ணா தேவலப்பா (38), ஜாவீத்கான்(39), உப்பள்ளியை சேர்ந்த ராயண்ணாகவுடா(27), பெங்களூரு பிஸ்மில்லாநகரை சேர்ந்த சையத் ரிஸ்வான்(39), மாரத்தஹள்ளியை சேர்ந்த ரோகன் மண்டல்(27) என்று தெரியவந்தது. இவர்களில் அஸ்லாம் முன்னாள் கூடைபந்து விளையாட்டு வீரர் ஆவார். காமன்வெல்த் போட்டியில் கூடைபந்து விளையாட்டில் அவர் பங்கேற்றிருந்தும் தெரிந்தது.

கைதான 6 பேரும் பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் குறைந்த விலைக்கு சட்டவிரோதமாக துப்பாக்கிகள், குண்டுகளை விற்பனை செய்து வந்துள்ளனர். பீகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு துப்பாக்கிகளை அஸ்லாம் விலைக்கு வாங்கி வந்து பெங்களூருவில் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தார். ஏற்கனவே அஸ்லாம் மீது பாரதிநகர், டி.ஜே.ஹள்ளி, ஜே.ஜே.நகரில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்றது, கொலை முயற்சி உள்பட 8 வழக்குகள் பதிவாகி இருந்தது.

சட்டவிரோத துப்பாக்கி விற்பனை தவிர கொள்ளை சம்பவங்களிலும் கைதான 6 பேரும் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. கைதான 6 பேரிடமும் இருந்து 4 துப்பாக்கிகள், 8 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் 6 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பீகார், மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ரெயில் மற்றும் பஸ்சில் துப்பாக்கிகளை கடத்தி வந்து விற்று வந்துள்ளனர். இதையடுத்து, ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் சோதனையை தீவிரப்படுத்தும்படி ரெயில்வே போலீசாருக்கு, கடிதம் எழுதப்படும்.

இவ்வாறு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் கூறினார். பேட்டியின் போது மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உடன் இருந்தார்.

Next Story