குரோம்பேட்டையில், வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்த வாலிபர்கள் 6 பேர் கைது


குரோம்பேட்டையில், வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்த வாலிபர்கள் 6 பேர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2019 11:15 PM GMT (Updated: 31 Dec 2019 5:12 PM GMT)

சென்னை குரோம்பேட்டையில் வாடகை வீட்டில் 3 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 6 வாலிபர்கள் போலீசாரிடம் சிக்கினர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை கணபதிபுரம் நாகாத்தம்மன் கோவில் தெருவில் வீரபாண்டி என்பவருக்கு சொந்தமான வீட்டில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட வாலிபர்கள் வாடகைக்கு தங்கி உள்ளனர்.

இந்நிலையில் இந்த வீட்டில் சந்தேகப்படும் படியாக பல வாலிபர்கள் வந்து செல்வதாகவும், அந்த வீட்டிலிருந்து ஒருவிதமான வாசனை வருவதாகவும் அப்பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் சகாதேவன் உத்தரவின் பேரில், சிட்லபாக்கம் போலீசார் அங்கு விரைந்து சென்று வீடு முழுவதும் சோதனை செய்தனர்.

அப்போது வீட்டில் சுமார் 3 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வீட்டில் இருந்த கல்லூரி மாணவர்கள் உள்பட 6 வாலிபர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோடம்பாக்கத்தை சேர்ந்த யஸ்வந்த் ராஜா (வயது 25), என்ஜினீயரிங் மாணவர்களான மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த ஸ்ரீகாந்த் (22), புதுச்சேரியை சேர்ந்த விக்னேஷ் (22), அந்தமானை சேர்ந்த சதீஷ்குமார்(22) மற்றும் கடலூரை சேர்ந்த கவுதம் (22), தூத்துக்குடியை சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா (26) ஆகியோர் என தெரியவந்தது.

இதில் பிடிபட்ட யஷ்வந்த் ராஜா மேடை கச்சேரி பாடகராக உள்ளார். இவர் மறைந்த பிரபல சினிமா பாடகர் ஒருவரின் பேரன் என கூறப்படுகிறது. இவர்கள் கஞ்சாவை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் வேலைகளில் ஈடுபட்டுவந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story