வாக்கு எண்ணும் மையங்களில் - கலெக்டர் ஆய்வு


வாக்கு எண்ணும் மையங்களில் - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Jan 2020 4:30 AM IST (Updated: 31 Dec 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்,

உள்ளாட்சி தேர்தலின்போது திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் பாண்டூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் அங்கு சென்று வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு பணியில் இருந்த அரசு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் திருவாலங்காட்டில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மொத்தம் 61 ஊராட்சிகள் உள்ளன. அந்த பகுதிகளில் அமைந்துள்ள 273 வாக்குச்சாவடிகள், 21 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தல் பணிக்காக கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அவற்றில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் எந்த வித அசாம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பாதுகாப்பு பணியில் ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், சேகர், கந்தகுமார், தென்னரசு, சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் மொத்தம் 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றித்தை சேர்ந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை நடைபெறுகிறது.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பிரிக்கப்பட்டு உள்ள 21 மண்டலங்களில் இருந்து வாக்குபெட்டிகள் நேற்று காலை 7 மணிக்கு தான் முழுமையாக வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து சேர்ந்தது. அவற்றை சரிபார்த்து பிரித்து தனி அறைகளில் வைத்து தேர்தல் நடத்தும் அதிகாரி சாமிநாதன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மாணிக்கம், ரவி உள்பட பலரது முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மேற்கண்ட அரசு மேல்நிலைப்பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த மையத்திற்கு தடையின்றி மின்வினியோகம் கிடைப்பதற் கான சிறப்பு ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து உள்ளனர்.

Next Story