பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு


பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 1 Jan 2020 4:30 AM IST (Updated: 1 Jan 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் பாதுகாப்பிற்காக காவல்துறையை நவீனப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களின் பாதுகாப்புக்காக குறிப்பாக பெண்கள், முதியவர்கள் பாதுகாப்புக்காக திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு அறிமுகப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலியையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அவசர காவல் உதவி செல்போன் எண்ணை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழக காவல்துறையால் பொதுமக்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலியை செல்போன் மூலம் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியை தொட்டவுடன் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது காவல்துறை வாகனத்தில் உள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் தங்கள் இருப்பிடம் தெரிவிக்கப்பட்டு உடனடியாக போலீசார் தாங்கள் இருக்கும் இடத்தை தேடி வருவார்கள்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மக்களிடையே தொடர்பினை வலுப்படுத்தவும் குற்றங்களை குறைக்கவும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க காவல்துறை திறம்பட செயல்பட ஹலோ போலீஸ் செல்போன் எண் 9442992526 அறிமுகப்படுத்தப்படுகிறது. 24-க்கு 7 இயங்கும் வகையில் வாட்ஸ்அப் மூலமாகவும் தங்கள் பகுதியில் உள்ள குற்றங்கள் அல்லது காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டிய வி‌‌ஷயங்களை தாங்கள் தெரியப்படுத்தலாம். அது ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு காவலன் செயலியை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழக காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலி மூலம் தமிழக காவல்துறையை நவீனப்படுத்தி பெண்கள் பாதுகாப்பிற்காக அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது. இதன்மூலம் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்த காவலன் செயலியை பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தி கொள்ளலாம்.

எனவே காவல்துறை மற்றும் பொதுமக்கள் நலனில் தமிழக அரசு என்றென்றும் அக்கறை கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

செல்போன் எண்ணை மாவட்ட கலெக்டர் சிவன்அருள் அறிமுகப்படுத்தி பேசினார். நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமே‌‌ஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம், ஒன்றிய செயலாளர் சி.செல்வம், தொகுதி செயலாளர் கே.எம்.சுப்ரமணியம், கல்லூரி மற்றும் கடைகளில் வேலை செய்யும் பெண்கள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் வரவேற்றார். முடிவில் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி நன்றி கூறினார்.

Next Story