சங்கிலி பறித்த திருடனை துணிச்சலாக பிடித்த வீரப்பெண் - சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளினார்


சங்கிலி பறித்த திருடனை துணிச்சலாக பிடித்த வீரப்பெண் - சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளினார்
x
தினத்தந்தி 1 Jan 2020 5:45 AM IST (Updated: 1 Jan 2020 1:54 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த திருடர்கள் சங்கிலியை பறித்தனர். துணிச்சலாக சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி திருடனை வீரப்பெண் பிடித்தார்.

சென்னை,

சென்னை கே.கே.நகர் 102-வது தெருவை சேர்ந்தவர் லதா (வயது 52). சென்னை போரூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பஸ்சில் லதா கே.கே.நகர் வந்தார். பின்னர் கே.கே.நகரில் உள்ள பி.டி.ராஜன் சாலையில் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென லதா அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி செல்ல முயன்றனர்.

உடனே லதா தைரியமாக தன்னிடம் சங்கிலியை பறித்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்தார். அதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். மற்றொருவர் மோட்டார் சைக்கிளுடன் தப்பி சென்று விட்டார்.

கீழே விழுந்த வாலிபரை பொதுமக்களுடன் சேர்ந்து லதா மடக்கிப்பிடித்து கே.கே.நகர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் லதாவிடம் சங்கிலி பறித்தவர் ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த தினேஷ் (19) என்பது தெரியவந்தது.

தினேசை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 8 பவுன் தங்கச்சங்கிலியை மீட்டனர். தப்பி ஓடிய அவரது கூட்டாளி ராஜாவை தேடி வருகிறார்கள்.

சங்கிலி பறித்த திருடனை துணிச்சலாக பிடித்த வீரப்பெண் லதாவை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Next Story