காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்வதால், கட்டளை கதவணைகளில் மின் உற்பத்தி பாதிப்பு


காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்வதால், கட்டளை கதவணைகளில் மின் உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2019 10:45 PM GMT (Updated: 31 Dec 2019 8:39 PM GMT)

காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்வதால் கட்டளை கதவணைகளில் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு,

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் கட்டளை கதவணைகள் கட்டப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக செக்கானூர், குதிரைகல்மேடு, நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிகோட்டை, பி.பி.அக்ரஹாரம், வெண்டிபாளையம், பாசூர் ஆகிய 7 இடங்களில் கட்டளை கதவணைகள் கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கட்டளை கதவணையிலும் தலா 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 எந்திரங்கள் அமைக்கப்பட்டு தினமும் அதிகபட்சமாக மணிக்கு 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. வினாடிக்கு 2 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. ஆற்றில் வரும் குறைந்த அளவு தண்ணீரும் அந்தந்த பகுதிகளில் உள்ள கட்டளை கதவணைகளில் மின்உற்பத்திக்காக தேக்கி வைக்கப்படுகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்வதால் மின்உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து இருப்பதும் மின்சாரத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் நேற்று மின்உற்பத்திக்காக தண்ணீர் செல்லும் மதகுகளுக்கு அருகில் ஆகாயத்தாமரை சூழ்ந்து இருந்தது. அங்கு ஆகாயத்தாமரையை அகற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கிரேன் மூலமாக ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றும் பணி நடந்தது. ஆனால் தண்ணீர் குறைவாக இருந்ததால் ஆற்றில் இழுவிசையில்லாமல் ஆகாயத்தாமரை தண்ணீரில் மிதந்தது. இதனால் கருவிகள் மூலமாக ஆகாயத்தாமரையை அகற்ற முடியவில்லை. இதைத்தொடர்ந்து ஒரு பெரிய கம்பு மூலமாக மின்வாரிய ஊழியர்கள் ஆகாயத்தாமரையை கருவியை நோக்கி தள்ளிவிட்டு அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தால் தான் கட்டளை கதவணைகளில் முழு உற்பத்தியை பெற முடியும். அதாவது அதிகபட்சமாக 30 மெகாவாட் வரை உற்பத்தி செய்யலாம். ஆனால் ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்கிறது. அதாவது வினாடிக்கு சுமார் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டும் செல்கிறது. இதனால் ஒரு எந்திரத்தில் 4 மெகாவாட் முதல் 5 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே ஒரு கட்டளை கதவணையில் 2 எந்திரங்களையும் சேர்த்து அதிகபட்சமாக 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story