பொங்கல் இலவச பொருட்கள் கிடைக்குமா? அமைச்சர் கந்தசாமி பதில்


பொங்கல் இலவச பொருட்கள் கிடைக்குமா? அமைச்சர் கந்தசாமி பதில்
x
தினத்தந்தி 31 Dec 2019 10:45 PM GMT (Updated: 31 Dec 2019 9:51 PM GMT)

பொங்கல் இலவச பொருட்கள் கிடைக்குமா? என்பதற்கு அமைச்சர் கந்தசாமி பதில் அளித்தார்.

புதுச்சேரி,

புதுவையில் 51 மைக்ரான் மற்றும் அதற்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக புதுச்சேரி சுற்றுச்சூழல் தகவல் மையம், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம், பிளாஸ்டிக் தடை குறித்த விளக்க வழிகாட்டி புத்தகத்தை தயாரித்துள்ளது. இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கு மாற்றான பொருட்களின் விவரம் விரிவாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல் சுற்றுச்சூழல் தகவல் மையம், மதிப்பு கூட்டப்பட்ட அறிவு அறிவியல் மாதாந்திர மற்றும் நாட்காட்டியை தயாரித்துள்ளது. இதில் அறிவியல் சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகள், கொண்டாட்டம், நிகழ்வுகளை மேற்கொள்வதற்கும், அந்தந்த மாதத்தில் சிறப்பிக்கப்பட்ட நாட்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்படி உள்ளது. வழிகாட்டி புத்தகம், மாதாந்திர மற்றும் நாட்காட்டி வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை அமைச்சர் கந்தசாமி தனது அலுவலத்தில் வைத்து வெளியிட சுற்றுச்சூழல் துறையின் செயலாளர் அர்ஜூன் சர்மா, இயக்குனர் ஸ்மிதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பொங்கல் பொருட்கள்

அப்போது அமைச்சர் கந்தசாமியிடம் பொங்கல் பொருட்கள் எப்போது வழங்கப்படும்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கந்தசாமி, இதுதொடர்பாக கோப்பு தயாரிக்கப்பட்டு ரூ.170 மதிப்புள்ள பொங்கல் பொருட்கள் வழங்க அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அவை வழங்கப்படும் என்றார்.


Next Story