பெரியகுளம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்; வாலிபர் அடித்துக்கொலை


பெரியகுளம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்; வாலிபர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 1 Jan 2020 11:30 PM GMT (Updated: 1 Jan 2020 4:47 PM GMT)

பெரியகுளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

தேவதானப்பட்டி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது மேல்மங்கலம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், வைகை அணை மெயின்ரோட்டில் உள்ள சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினர்.

அப்போது பெரியகுளம் செல்வதற்காக அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்த பாண்டிய பிரபு, தமிழரசு, யோகேஷ், பிரகாஷ், குணா ஆகிய 5 இளைஞர்கள் வந்தனர்.

இந்தநிலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், புத்தாண்டு கொண்டாடிய மேல்மங்கலத்தை சேர்ந்த ஒரு சிறுவனை மோட்டார் சைக்கிளால் இடித்து தள்ளியதாக தெரிகிறது. இதனால் 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது மேல்மங்கலத்தை சேர்ந்தவர்கள், பாண்டியபிரபு உள்பட 5 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பித்து வடுகபட்டி சென்றனர்.

இதற்கிடையே வடுகபட்டியில் இருந்து பாண்டியபிரபு செல்போன் மூலம் தனது நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு, தங்களை மேல்மங்கலத்தை சேர்ந்தவர்கள் தாக்கியதாக தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அதனை தட்டிக்கேட்பதற்காக ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்த கார்த்திக் (வயது 22), பசுபதி (24) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், அதே ஊரை சேர்ந்த மேலும் சிலர் வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களிலும் மேல்மங்கலத்திற்கு சென்றனர். அங்கு அவர்களும், மேல்மங்கலத்தை சேர்ந்தவர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் கார்த்திக், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இருதரப்பையும் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இருதரப்பினர் மோதல் குறித்து தகவல் அறிந்த ஜெயமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் வருவதற்குள் மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தால் மேல்மங்கலம், ஜெயமங்கலம் கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.

இதையடுத்து இறந்துபோன கார்த்திக் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மேல்மங்கலம் கிராமத்திற்கு விரைந்தார். மேலும் அவரது உத்தரவின்பேரில் ஜெயமங்கலம், மேல்மங்கலம் கிராமத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கொலை சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கார்த்திக்கை கொலை செய்த நபர்களை கைது செய்யக்கோரி, ஜெயமங்கலம் காந்திநகர் காலனி மக்கள் ஜெயமங்கலம்-வைகை அணை சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மறியலில் ஈடுபட்டவர்களிடம், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் பேச்சுவார்த்தை நடத்தி, கொலை செய்த நபர்களை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டனர்.

இதேபோல் பெரியகுளம் அரசு மருத்துவமனை முன்பு கார்த்திக்கின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேரில் விசாரணை நடத்தினார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story