மங்களூரு அருகே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி சுங்கச்சாவடி முற்றுகை பொதுமக்கள் போராட்டம்


மங்களூரு அருகே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி சுங்கச்சாவடி முற்றுகை பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2020 4:15 AM IST (Updated: 2 Jan 2020 12:21 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு அருகே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

மங்களூரு,

மங்களூரு தாலுகா தலப்பாடி அருகே பம்ப்வெல் பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் பாலம் கட்டும் பணிகள் நிறைவு பெறவில்லை. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த தட்சிண கன்னடா தொகுதி எம்.பி. நளின்குமார் கட்டீல், பம்ப்வெல் பாலம் கட்டும் பணிகள் முடிந்து விட்டதாகவும், விரைவில் இந்த பாலம் திறக்கப்படும் என்று கூறினார்.

சுங்கச்சாவடி முற்றுகை

பாலம் கட்டும் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், விரைவில் பாலம் திறக்கப்படும் என்று நளின்குமார் கட்டீல் கூறியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிைலயில் பம்ப்வெல் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் பாலத்தை திறக்க கூடாது என்று கூறி தலப்பாடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பம்ப்வெல் பகுதி மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சில அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை

இந்த போராட்டம் பற்றி அறிந்ததும் மங்களூரு வடக்கு ெதாகுதி எம்.எல்.ஏ. வேதவியாஸ் காமத், மங்களூரு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பரத் ஷெட்டி, தலப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டம் நடத்தியவர்கள் பம்ப்வெல் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், பணிகள் முழுமையாக நிறைவு பெறும் வரை பாலத்தை திறக்க கூடாது, இந்த பணிகள் நிறைவு பெறும் வரை சுங்ககட்டணம் வசூலிக்க கூடாது என்று கூறினர்.

இதனை ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ.க்கள் பாலம் கட்டும் பணி நிறைவு பெறும் வரை சுங்ககட்டணம் வசூலிக்கப்படாது என்று கூறினர். மேலும் போராட்டத்தை கைவிடும்படியும் கேட்டு கொண்டனர். இதனால் போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story