பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டம்: குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 426 வழக்குகள் பதிவு


பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டம்: குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 426 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 2 Jan 2020 4:15 AM IST (Updated: 2 Jan 2020 1:23 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்ட இரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 426 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பெங்களூரு,

பெங்களூரு நகரில் ஆண்டுதோறும் எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, கோரமங்களா உள்பட பல்வேறு இடங்களில் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த வேளையில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் புதிய ஆண்டை வரவேற்பார்கள்.

அந்த வகையில் பலர் கேளிக்கை விடுதிகளுக்கு சென்று மதுபானம் அருந்தி குடிபோதையில் புத்தாண்டை கொண்டாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவும் பெங்களூரு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, கோரமங்களா உள்பட பல்வேறு இடங்களில் புத்தாண்டு களைகட்டியது.

பெண்கள் மீட்பு

இந்த வேளையில் குடிபோதையில் இருந்த சிலர் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. சர்ச் தெருவில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரை பெண் ஒருவர் செருப்பால் அடித்தார்

மேலும் குடிபோதையில் சில பெண்கள் நிலைத்தடுமாறியுள்ளனர். மேலும் சிலர் கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு வாகனங்களில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

426 வழக்குகள் பதிவு

மேலும் பெங்களூரு நகரில் வாகன ஓட்டிகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த வேளையில் வாகன ஓட்டிகள் மதுபானம் குடித்துள்ளார்களா? என்பதை சோதனையிட்டனர்.

இந்த சோதனையின்போது கிழக்கு மண்டலத்தில் 99 பேர், மேற்கு மண்டலத்தில் 254 பேர், வடக்கு மண்டலத்தில் 73 பேர் என்று மொத்தம் 426 பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

Next Story