வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்: ஒரே நாளில் ரூ.5¾ கோடிக்கு மதுவிற்பனை


வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்: ஒரே நாளில் ரூ.5¾ கோடிக்கு மதுவிற்பனை
x
தினத்தந்தி 2 Jan 2020 3:30 AM IST (Updated: 2 Jan 2020 1:35 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ரூ.5¾ கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.

வேலூர், 

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் பொங்கல்,தீபாவளி, ஆயுதபூஜை, புத்தாண்டு என பண்டிகைகளின்போது மதுவிற்பனை அதிக அளவில் நடக்கும். மதுபிரியர்கள் கூட்டம் கூட்டமாக சென்று மதுவாங்கி குடிக்கிறார்கள்.

அதன்படி இந்த ஆங்கில புத்தாண்டு தினத்திலும் வேலூர் மாவட்டத்தில் மதுவிற்பனை அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தை பொருத்தமட்டில் வேலூர், அரக்கோணம் என இரண்டு மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் 108 கடைகளும், அரக்கோணம் மாவட்டத்தில் 84 கடைகளும் உள்ளன. இந்த கடைகளில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் கூட்டம் அலைமோதியது. மதுபிரியர்கள் மதுவாங்கி குடித்துவிட்டு புத்தாண்டு கொண்டாடினர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் மட்டும் 5,593 பெட்டி பிராந்தி, 3,723 பெட்டி பீர் விற்பனையாகி இருக்கிறது. மொத்தம் ரூ.3 கோடியே 64 லட்சத்துக்கு மதுவிற்பனையாகி இருந்தது.

அதேபோன்று அரக்கோணம் மாவட்டத்தில் 84 கடைகளில் 3,619 பெட்டி பிராந்தி, 1,975 பெட்டி பீர் என ரூ.2 கோடியே 23 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளது. மொத்தம் ரூ.5 கோடியே 87 லட்சத்துக்கு மதுவிற்பனையாகி இருக்கிறது.

Next Story