மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 3,974 பேர் ஈடுபடுகிறார்கள் கலெக்டர் மெகராஜ் தகவல்


மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 3,974 பேர் ஈடுபடுகிறார்கள் கலெக்டர் மெகராஜ் தகவல்
x
தினத்தந்தி 2 Jan 2020 4:30 AM IST (Updated: 2 Jan 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 3,974 பேர் ஈடுபட இருப்பதாக கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) 15 மையங்களில் எண்ணப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர். இதற்கிடையே இந்த பணியில் 1,185 மேற்பார்வையாளர்கள், 2,789 உதவியாளர்கள் என மொத்தம் 3,974 பேர் ஈடுபட இருப்பதாக கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 வகையான பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

எனவே முதலில் 4 வகையான வாக்குசீட்டுகளும் நிறத்தின் அடிப்படையில் பிரிக்கப்படும். பின்னர் தனித்தனி பகுதிகளில் வைத்து எண்ணப்பட உள்ளது. இந்த பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதற்கிடையே நேற்று அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் எலச்சிபாளையம் மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் மையங்களை நேற்று கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறை, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் பணியினை நேரில் பார்வையிட்டார். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் தனித்தனியான பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்தார்.


Next Story