வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 350 போலீசார்


வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 350 போலீசார்
x
தினத்தந்தி 2 Jan 2020 3:45 AM IST (Updated: 2 Jan 2020 3:05 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 350 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சிவகாசி,

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 27-ந்தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 54 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 243 பேர் போட்டியிட்டனர். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 1,163 பேரும், 31 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 188 பேரும், 3 மாவட்ட பஞ்சாயத்து பதவிகளுக்கு 23 பேர் போட்டியிட்டனர். 326 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவின் முடிவில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 965 பேர் மட்டுமே வாக்களித்தனர். இது 69.86 சதவீதம் ஆகும்.

வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்கு பெட்டிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள எஸ்.எச்.என்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு முதல் மாடியில் உள்ள 4 அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அறைகளில் கம்புகள் கட்டும் பணியும் முடிந்து விட்டது.

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட போகும் அரசு அலுவலர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான பெட்டிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட தாள்கள் ஆகியவை வாக்கு மையத்துக்கு கொண்டு வரப்பட்டு தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளது.

சிவகாசியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு பதிவான ஓட்டுகளை ஒரு இடத்திலும், பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு ஓட்டுகளை ஒரு இடத்திலும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பதிவான ஓட்டுகள் ஒரு இடத்திலும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பதிவான ஓட்டுகள் ஒரு இடத்திலும் எண்ண முடிவு செய்யப்பட்டு அதற்கான அறைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்ல தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் அவர்கள் செல்ல வேண்டும். அவர்கள் செல்லும் வழியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்லும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதை அவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் மின் விளக்கு, மின்விசிறி போன்ற வசதிகள் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. எந்தந்த பஞ்சாயத்து வாக்குகள்எங்கு எண்ணப்படுகிறது என்ற விவரம் குறித்த பேனர் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.

சிவகாசியில் இன்று (வியாழக்கிழமை) வாக்குகள் எண்ணப்படுவதால் சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் போக்குவரத்தை தடை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் முதல் விளாம்பட்டி ரோடு வரை உள்ள பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்று காலை 5 மணி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி வரும் அனைத்து வாகனங்களும் பெரியகுளம் கண்மாய்வழியாக விளாம்பட்டி ரோட்டுக்கு வந்து அங்கிருந்து சிவகாசி நகருக்கு செல்லும் வழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறஉள்ள எஸ்.எச்.என்.வி. பள்ளியின் முன்பும், வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் வழியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டு அதற்காக சிவகாசி துணை போலீஸ்சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள் உள்பட 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை அணிந்து இருக்க வேண்டும்.

அடையாள அட்டை இல்லாத நபர்கள் வாக்கு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் அனைவரும் முழு சோதனைக்கு பின்னர் தான் அனுமதிக்கப்படுவார்கள். இவர்களை பரிசோதிக்க மெட்டல் டிெடக்டர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story