ஒரு வருடத்துக்கு முன்பு அறிவித்ததை நடைமுறைப்படுத்தி பெரியார் பஸ் நிலையம் வரும் பஸ்கள் மாற்று இடங்களில் இருந்து புறப்படுமா?
மதுரை பெரியார் பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படுவதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாற்று இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை பெரியார் பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புனரமைக்கப்படுகிறது. பஸ் நிலையம் முழுமையாக பணிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விட்ட நிலையில், பெரும்பாலான பஸ்கள் பெரியார் பஸ் நிலையத்தை சுற்றிலும் உள்ள ரோட்டோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகிறது.
இதனால், பஸ்களில் செல்லும் பயணிகள் மட்டுமின்றி, வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் பராமரிப்பு பணிமனை மற்றும் பஸ் நிலையங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக டவுன் பஸ்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் இடங்கள் குறித்து ஓராண்டுக்கு முன்பு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கை இன்றளவும் வெளியூர்களில் உள்ள பஸ் பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பஸ் நிலையங்களில் உள்ள தகவல் பலகைகளில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் வழியாக செல்லும் பஸ்கள் திருப்பரங்குன்றம் ரோட்டிலும், தெப்பக்குளம், விரகனூர், திருப்புவனம் வழியாக செல்லும் பஸ்கள் கிரைம் பிராஞ்ச் அலுவலகம், திருப்பரங்குன்றம் ரோட்டிலும், சிந்தாமணி, வேலம்மாள் ஆஸ்பத்திரி, நெடுங்குளம் செல்லும் பஸ்கள் திருப்பரங்குன்றம் ரோட்டிலும் நிறுத்தப்பட வேண்டும்.
அவனியாபுரம், மண்டேலாநகர், காரியாபட்டி வழியாக செல்லும் பஸ்கள் ஹயாத்கான் தெரு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பாகவும், அழகர்கோவில், ஊமச்சிகுளம் பஸ்கள் மதுரை கோட்டை, திண்டுக்கல் ரோட்டிலும், ஒத்தக்கடை, மேலூர், திருவாதவூர் பஸ்கள் பாண்டி பஜார் சர்ச், ரெயில் நிலையம், மேலவெளிவீதி ரோட்டிலும், பாத்திமா கல்லூரி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, விக்கிரமங்கலம் பஸ்கள் மகபூப்பாளையம், ரெயில்நிலைய மேற்கு நுழைவுவாயில் முன்பும், காமராஜர் பல்கலைக்கழகம், செக்கானூரணி, உசிலம்பட்டி பஸ்கள் எல்லீஸ் நகர் மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்துமிடத்திலும், மாட்டுத்தாவணி, அண்ணா பஸ் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம் செல்லும் பஸ்கள் நடராஜ் தியேட்டர், பைபாஸ்ரோடு, பழங்காநத்தம் பகுதியிலும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வரை அனைத்து பஸ்களும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வரும் பெரியார் பஸ் நிலையத்தை சுற்றிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
ஏற்கனவே, அறிவித்தபடி, மேற்கண்ட இடங்களில் பஸ்களை நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும். எதற்காக இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படாமல் உள்ளது என்பது கேள்விக் குறியாக உள்ளது.
அதேபோல, பெரியார் பஸ் நிலையத்தை சுற்றி இருந்த பிளாட்பார கடைகள் அனைத்தும் எல்லீஸ் நகர் மெயின் ரோட்டில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
ஆனால், ஐகோர்ட்டு தடை காரணமாக அந்த பகுதிக்கு கடைகள் மாற்றப்படவில்லை. இந்த கட்டுப்பாடு பெயரளவுக்கு இருந்தாலும், ஆர்.டி.ஓ.அலுவலகம், எல்லீஸ்நகர் மெயின் ரோடு, திருப்பரங்குன்றம் சாலை ஆகியவற்றில் இந்த கடைகளே அதிகம் ஆக்கிரமித்துள்ளன.
ஏற்கனவே, இந்த பகுதிகளில் உள்ள வணிகவளாகங்களில் கடைகள் வைத்திருப்பவர்கள் தங்களது பங்குக்கு பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்போது, பிரதான சாலைகளை பிளாட்பாரகடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால், வாகன நெரிசலில் மதுரை பெரியார் பஸ் நிலைய பகுதி சிக்கி திணறி வருகிறது. அதிகாரிகளின் மெத்தனத்தால் ஏற்பட்டுள்ள இந்த அவலம் என்று தீருமோ என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பொதுமக்களை கிள்ளுக் கீரையாக கருதாமல் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story