பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை தேர்தல் பார்வையாளர் ஆய்வு


பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Jan 2020 4:30 AM IST (Updated: 2 Jan 2020 8:12 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஒரு கிராம ஊராட்சி தலைவரும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 கிராம ஊராட்சி தலைவரும் என மொத்தம் 5 பேர் போட்டியிட்டு தேர்ந்து எடுக்கப்பட்டனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினரில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 37 பேரும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 47 பேரும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 80 பேரும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 54 பேரும் என மொத்தம் 218 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.

3,111 பேர் போட்டி

இதனால் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 146 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 19 கிராம ஊராட்சி தலைவர், 14 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 181 பதவியிடங்களுக்கு 607 பேர் போட்டியிட்டனர். இதே போல் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 232 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 32 கிராம ஊராட்சி தலைவர், 23 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 289 பதவியிடங்களுக்கு 937 பேர் போட்டியிட்டனர்.

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 190 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 28 கிராம ஊராட்சி தலைவர், 21 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 241 பதவியிடங்களுக்கு 708 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதே போல் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 246 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 37 கிராம ஊராட்சி தலைவர், 18 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 303 பதவியிடங்களுக்கு 859 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் 1,014 பதவியிடங்களுக்கு 3,111 பேர் போட்டியிட்டனர்.

78.66 சதவீதம் வாக்குப்பதிவு

அதனை தொடர்ந்து அந்த பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக கடந்த 27-ந் தேதி 293 வாக்குச்சாவடிகளிலும், 2-ம் கட்டமாக வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 30-ந் தேதி 355 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த வாக்குப்பதிவில் 77.40 சதவீதம் வாக்குகள் பதிவானது. 2 கட்டமாக நடந்த வேப்பந்தட்டை-ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 74.80 சதவீதம் வாக்குகள் பதிவானது. பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3,81,090 வாக்காளர்களில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 1,37,125 ஆண் வாக்காளர்களும், 1,63,042 பெண் வாக்காளர்களும், 3 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 782 வாக்காளர்கள் வாக்களித்தனர். பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 78.66 சதவீதம் வாக்குகள் பதிவானது.

வாக்கு எண்ணிக்கை

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள், அதற்கான வாக்கு எண்ணும் மையமான பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு, வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ‘சீல்‘ வைக்கப்பட்டது. வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் அதற்கான வாக்கு எண்ணும் உடும்பியம் ஈடன் கார்டன் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ‘சீல்‘ வைக்கப்பட்டது. மேலும் வாக்கு பெட்டிகள் இருந்த 4 இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

முன்னதாக காலை 6 மணிக்கு மேல் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்திருந்த வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற வந்திருந்த அலுவலர்களை போலீசார் சோதனையிட்டு அடையாள அட்டை வைத்திருந்தவர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும் சோதனையிட்டனர். முதலில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் ‘சீல்‘ காலை 8 மணி அளவில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது.

ஆய்வு

அதன்பிறகு வாக்குப்பெட்டிகள் வாக்குச்சீட்டு பிரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வாக்குப்பெட்டிகளின் சீல்கள் அகற்றப்பட்டு, வாக்குச்சீட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டன. பின்னர் தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ள அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர் அனில்மிஸ்ராம் ஆய்வு செய்தார். 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 2,200 அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் மொத்தம் 700 போலீசாரும் ஈடுபட்டனர்.


Next Story